Wednesday, March 12, 2014

ஆயிரம் வருடங்கள் வாழ்வது எப்படி? - பாகம் 2

Published by Solvanam.com site at http://solvanam.com/?p=32182

அழிவில்லாத ஓர் அமெரிக்கப்பெண்

வருடம் 1951. அமெரிக்காவிலுள்ள மரிலண்ட் மாகாணத்தில் பால்ட்டிமோர் என்று ஒரு நகரம். இந்நகரின் வெளியே புகையிலை பயிர் செய்யும் பண்ணைகளில் கூலித்தொழில் செய்து வாழும் ஒரு ஏழைக்குடும்பத்தை சேர்ந்த இளம்பெண் ஹென்றியேட்டா லாக்ஸ். கறுப்பர்கள் [2], சரியாக சொல்லப்போனால் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் இனத்தைச்சேர்ந்தவரான இவர், ஐந்து குழந்தைகளுக்கு தாய். கொஞ்சநாட்களாகவே கடுமையான வயிற்று வலியினால் அவதிபட்டுக்கொண்டு இருந்த அவர், தன் கணவன் டேவிட்டை தன்னை சிகிச்சை பெற அழைத்துச்செல்லும்படி வற்புறுத்தினார். டேவிட் தன் மனைவியை பால்ட்டிமோரில் இருந்த ஜான்ஸ் ஹாப்கின்ஸ் என்று பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற போது ஹென்றியேட்டாவுக்கு வயிற்றில் ஒரு பெரிய கட்டி இருப்பதைக் கண்டுபிடித்து மருத்துவர்கள் சிகிச்சை அளிக்க ஆரம்பித்தனர். கட்டி வந்ததின் காரணம் ஹென்றியேட்டாவை பிடித்திருந்த மிக மோசமான கர்பப்பை வாய் புற்றுநோய் (cervical cancer). பரிசோதனைக்காக கட்டியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்ட திசு மாதிரி (tissue sample) ஆய்வகதிற்கு அனுப்பப்பட்டபோது, அதிலிருந்து ஒரு பாதி அதே மருத்துவமனையை சேர்ந்த, உயிரணுக்களை பீட்ரி தட்டில் வளர்க்க முயன்று கொண்டிருந்த, டாக்டர் ஜார்ஜ் கய்யின் ஆய்வகதிற்கும் அனுப்பப்பட்டது. கய்யின் உதவியாளர் மேரி, டஜன் கணக்கில் முந்தைய திசு மாதிரிகளை செய்தது போலவே இந்த திசுக்களையும் ஊட்டச்சத்து மிகுந்த ஒரு திரவத்தில் சேர்த்து சரியாக 37 டிகிரி செல்சீயெஸ் வெப்பநிலையையும் தேவையான ஈரப்பதத்தையும் பராமரிக்கும் ஒரு பெட்டிக்குள் அடை காக்க வைத்துவிட்டு வீட்டுக்குப்போனார்.
Henrietta Lacks_David_Cancer_Tumor_Research
ஹென்றியேட்டா, டேவிட் லாக்ஸ் தம்பதிகள்
தொடர்ந்த சில பல நாட்களில் இந்த உயிரணுக்கள் மற்ற மாதிரிகளில் இருந்து மிகவும் வேறுபட்டவை என்று ஆய்வகத்திலிருந்த அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது. ஏனெனில் ஹென்றியேட்டாவின் வயிற்றில் எந்த மருந்து மாத்திரை கதிர்வீச்சு சிகிச்சைகளுக்கும் பணிந்து விடாமல் ஒரு கால்பந்து அளவுக்கு வளர்ந்த அந்த கொடிய புற்றுநோய் உயிரணுக்கள் அதே அசுரவேகத்துடன் ஆய்வகத்திலும் வளர ஆரம்பித்தன. அது மட்டுமில்லை. சாதாரணமாக நன்கு வளருவதாக கருத்தப்படும் உயிரணுக்கள் கூட இரு பரிமாணங்களில் மட்டும்தான் வளரும். அதாவது ஒரு தட்டிலோ குடுவையிலோ அவை வளரும்போது கிடைமட்டமாக ஒரு அடுக்கு பாத்திரத்தின் சுற்றளவு வரை வளர்ந்துவிட்டு போதும் என்று நிறுத்திக்கொண்டுவிடும். ஹென்றியேட்டாவின் உயிரணுக்களோ அடுக்கடுக்காக மூன்று பரிமாணங்களிலும், ஊட்டச்சத்து கிடைக்கும்வரை, வைத்த பாத்திரங்களை பொங்கல்பானைகளாக கருதி வளர்ந்து பொங்கி வழிந்து கொண்டே இருந்தன. உயிரியல் ஆய்வகங்களின் வழக்கப்படி இந்த உயிரணு வரிசைக்கு கொடையாளரின் பெயரின் முதலெழுத்துக்களை சேர்த்து ஹீலா செல் வரிசை என்று பெயர் வைக்கப்பட்டது.
சில மாதங்களில் ஜார்ஜ் கய் ஆய்வக குடுவைகளை ஓரமாக வைத்துவிட்டு பெரிய கொப்பரை மாதிரியான தொட்டிகளில் ஹீலா உயிரணுக்களை வளர்க்க ஆரம்பித்தார். இதனை கேள்விப்பட்ட ஆனால் இந்த மாதிரியான ஒரு செல் வரிசையை கண்டுபிடிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்த பல ஆய்வகங்கள் தங்களுக்கும் கொஞ்சம் ஹீலா சாம்பிளை அனுப்புமாறு கேட்டுக்கொண்டன. கய் கேட்டவர்களுக்கெல்லாம் சாம்பிள்களை பாரி வள்ளல் போல் வாரி வழங்கினார். கய் என்னவோ இந்த செல் வரிசை தயாரிப்பிலிருந்து தனக்கென ஏதும் பணம் சம்பாதித்துக்கொள்ளவில்லை எனினும், சில வருடங்களில் வணிக நிறுவனங்கள் உள்ளே புகுந்து உற்பத்தியை எடுத்துக்கொண்டு விட்டன. தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்ட ஹீலா உயிரணு சாம்பிள்கள் உலகம் முழுவதிலிருந்தும் வந்து குவிந்த ஆர்டர்களை பூர்த்தி செய்ததில் பலர் கோடீஸ்வரர்களானார்கள். ஆனால் ஹென்றியேட்டாவின் குடும்பத்திற்கு இதிலிருந்து இன்றுவரை ஒரு ரூபாய் கூடக்கிடைக்கவில்லை.
அந்த கொடிய நோயை எதிர்த்துப்போராட கொடுக்கப்பட்ட சக்தி வாய்ந்த மருந்துகளையும் கதிர்வீச்சையும் தாங்காமல் மேன்மேலும் உடல்நலம் குறைந்து அந்த வருடமே 31 வயதேயான ஹென்றியேட்டா இறந்து போனார். ஆனால் அவர் உலகிற்கு தந்த ஹீலா உயிரணுக்களோ முதலில் அமெரிக்காவிலும் பின் ஐரோப்பாவிலும் அதன்பின் இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளிலும் தொடர்ந்து நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இன்றும் வளர்ந்து கொண்டு இருக்கின்றன. மற்ற செல் வரிசைகளைப்போல் மிகச்சரியான வெப்பநிலை, ஈரப்பதம் எதையும் கேட்காமல் கிடைத்த இடத்தில் எல்லாம் இந்த உயிரணுக்கள் சுலபமாக வளருவதால், மருந்து தயாரிக்கும் ஆய்வகங்களுக்கும், பல்வேறு விதமான உயிரணு ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விஞ்ஞானிகளுக்கும் இந்த செல் வரிசை ஒரு வரப்ரசாதமாக அமைந்துள்ளது. எனவே போலியோ தடுப்பூசி கண்டுபிடித்ததற்கான ஆய்விலிருந்து, எய்ட்ஸ் நோய் ஆராய்ச்சி, அக்கி (Herpes), லுக்கிமியா, பலவிதமான காய்ச்சல்கள், இரத்த ஒழுக்கு (Hemophilia) சம்பந்தப்பட்ட ஆய்வுகள், நகலிடுதல் (cloning), மரபணு படமிடல் (gene mapping), கதிர்வீச்சு சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகள் என்று பலவற்றிலும் ஹீலா உயிரணுக்கள் பங்கேற்றிருக்கின்றன, விண்வெளியில் பறந்த ராக்கெட்டுகளில் பயணித்து இருக்கின்றன. இன்னும் சொல்லப்போனால், ரஷ்யாவில் சில ஆய்வகங்களில் ஒரு அறையில் வைக்கப்பட்டிருந்த ஹீலா உயிரணுக்கள் ஏர் கண்டிஷன் காற்றோடு சேர்ந்து போய் பக்கத்து அறைகளில் வைக்கப்பட்டிருந்த வேறு செல் வரிசைகளோடு கலந்து, மிக வேகமாக தங்கள் குணாதிசயங்களை அந்த உயிரணுக்களுக்கும் கொடுத்து நடந்த கலப்படத்தின் மூலம், அங்கு நடந்து கொண்டிருந்த வேறு ஆய்வுகளை பாழடித்த வரலாறு கூட உண்டு. அதிலிருந்து இந்த ஹீலா செல் வரிசையின் சக்தியை புரிந்துகொண்டு விஞ்ஞானிகள் இந்த உயிரணுக்களை மட்டும் மிக மரியாதையுடனும் கவனத்துடனும் நிர்வகித்து வருகிறார்கள். சில புள்ளி விவரங்களின்படி கடந்த அறுபது வருடங்களில் உருவாக்கப்பட்ட ஹீலா உயிரணுக்களின் மொத்த எடை ஐந்து கோடி டன்களுக்கு மேலாக இருக்குமாம். அந்த எண்ணிண் பிரம்மாண்டத்தை ஒரு கணம் நின்று யோசித்து புரிந்து கொள்வது அவசியம்.

டெலோமியர் மர்மம்

இந்த ஹீலா செல் வரிசை மட்டும் ஹேய்பிலிக் எல்லைக்கெல்லாம் அடிபணியாமல் இஷ்டத்திற்கு வளர முடிந்தது எப்படி என்று பல ஆய்வாளர்கள் நுண்ணோக்கிகளுக்குள் தலையை விட்டு தேடிக்கொண்டு இருந்தார்கள். இந்த தேடலின் முதல் படியாக பாதி வயதான, அதாவது ஒரு இருபத்தைந்து முறை பிரிந்து வளர்ந்த, ஒரு உயிரணுவை கொஞ்ச நாட்கள் மிகக்குறைந்த வெப்பநிலையில் இருக்கும் ஒரு குளிர்பதன பெட்டியில் போட்டு உறைய வைத்தார்கள். அந்த நிலையில் உயிரணுக்கள் பிரிந்து வளர்வது நின்று போய் அவை தூங்கப்போய் விடுகின்றன. பின் அதனை திரும்பவும் சாதாரண வெப்பநிலைக்கு கொண்டுவந்தால் விழித்துக்கொண்டு திரும்பவும் வளர ஆரம்பித்தன. ஆனால் வளர்ச்சி என்னவோ விட்ட இடத்திலிருந்துதான். எனவே இன்னொரு இருபத்தைந்து முறை பிரிந்து வளர்ந்தவுடன் போதும் என்று வளர்வதை நிறுத்திக்கொண்டு பின் வழக்கம் போல் மடிய ஆரம்பித்தன. எத்தனை நாட்கள் அல்லது மாதங்கள் அல்லது வருடங்கள் உறைய வைத்தாலும் இந்த நடத்தையிலிருந்து மாறுபாடு எதுவும் தெரியவில்லை. எனவே இத்தனை முறை மட்டுமே பிரிந்து வளர முடியும் என்பதுதான் எல்லையே தவிர குறிப்பிட்ட காலம் என்று எல்லைக்கோடு ஏதுமில்லை என்பது புரிந்தது.
ஆய்வைத்தொடர்ந்து இன்னும் பல கோணங்களில் இருந்து அலசிப்பார்த்து, 1970களிலேயே இந்த ஹேய்பிலிக் எல்லை புதிரின் விடை உயிரணுக்களின் உட்கருவிற்குள்தான் இருக்கிறது என்று நிச்சயம் செய்துவிட்டார்கள். எப்படி? முதலில் ஒரு புது உயிரணுவை எடுத்து ஆய்வகத்தில் பீட்ரி தட்டில் போட்டு அதன்பாட்டுக்கு வளரவிட்டார்கள். அப்படி அது ஒரு நாற்பத்தி ஐந்து முறை பிரிந்து வளர்ந்தபின் அதை குளிர்வித்து வளர்ச்சியை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, மெல்ல அதன் உட்கருவை அறுத்தெடுத்து தூக்கி எறிந்துவிட்டு வேறொரு புது உயிரணுவின் உட்கருவை எடுத்து இந்த உயிரணுவில் பொருத்தி, திரும்பவும் அதை 37 டிகிரி வெப்பநிலைக்கு கொண்டுவந்து எழுப்பிவிட்டார்கள். தான் தூங்கிக்கொண்டு இருந்தபோது தனக்கு நடந்த அறுவை சிகிச்சை பற்றி ஒன்றும் தெரியாத உயிரணு விழித்துக்கொண்டபின் மீதமிருந்த ஐந்து முறை மட்டும் வளராமல் திரும்பவும் ஐம்பது முறைக்கு மேல் வளர்ந்து காட்டியது! எனவே இந்த ஹேய்பிலிக் எல்லை உயிரணுவின் உட்கருவுக்குள் இருந்துதான் நிர்வகிக்கப்படுகிறதென்பது உறுதியானது.
அதற்கப்புறம் இன்னொரு பத்து வருடங்கள் எத்தனையோ ஆய்வாளர்கள் முடியை பிய்த்துக்கொண்டு வழுக்கையானபின், புதிரின் விடை டெலோமியர் என்று சொல்லப்படும் குரோமசோம நுணிகளில் இருப்பது புரிந்தது. உயிரணுக்களின் உட்கருவுக்குள் குரோமோஸோம்கள் X வடிவில் உள்ளன என்று முன்பு பார்த்தோம். அந்த X-ன் நான்கு முனைகளிலும் காணப்படும் ஒரு மிகச்சிறிய பகுதிதான் டெலோமியர். இவைதான் படத்தில் காணப்படும் நீலநிற குரோமோஸோம்களின் விளிம்பில் இருக்கும் மஞ்சள் புள்ளிகள்.
cells_Atoms_Science_Blue_Black_Shine_Sparkles_White_Protons_Research_Electrons_Neutron_Elementsநமது காலணிகளை இறுக்கி அணிந்துகொள்ள சின்னக் காலணிக்கயிறுகளை (shoe lace) உபயோகிக்கிறோம் அல்லவா? அந்த கயிறுகளின் முனை நாட்பட்ட உபயோகத்தில் பிரிந்து விடாமல் இருக்க ஒரு சிறிய உலோக அல்லது பிளாஸ்டிக் உறை (aglet) இருப்பதை பார்திருப்பீர்களே, அதே பணியை டெலோமியர்களும் செய்து, தாங்கள் கட்டிக்கொண்டு இருக்கும் குரோமோஸோம்கள் பிய்ந்து விடாமல் பார்த்துக்கொள்கின்றன. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு உயிரணு வளர்ந்து பிரியும்போது இந்த குரோமோஸோம்களும் வளர்ந்து பிரிகின்றன அல்லவா? அந்த நகலாக்கக்தின்போது இந்த டெலோமியர்கள் தங்கள் நீளத்தை சற்றே இழந்து சிறிதாகின்றன. இப்படி ஒரு ஐம்பது, அறுபது முறை ஒவ்வொரு செல் பிரிவின்போதும் நீளம் கத்தரிக்கப்பட்டு குறைபடும் டெலோமியர்கள், இறுதியில் ஏறக்குறைய காணாமலே போய்விடுவதால், அத்தனை முறை வளர்ந்திருக்கும் குரோமோஸோம்கள் தளர்ந்து பிய்ந்து போக ஆரம்பிக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றன. இத்தகைய தளர்ந்த குரோமோஸோம்களை பிரதி எடுக்க முடியாதென்பதால், உயிரணு வளர்ச்சி அத்தோடு நின்று போய் விடுகிறது! அந்த உயிரணுக்கள் அவயங்களுக்கேற்றபடி குறிப்பிட்ட காலம் வரை வாழ்ந்துவிட்டு, அபோப்டோசிஸ் (Apoptosis) என்ற நிலையை அடைந்து மடிகின்றன. இந்த மாபெரும் புரிதலுக்குப்பின் பின் இன்னும் பத்து வருடங்கள் சென்று இன்னும் பல ஆய்வாளர்களுக்கு வழுக்கை விழுந்தபின், உயிரணுக்குள் இருக்கும் டெலோமீரஸ் என்ற ஒரு புரதம்தான் டெலோமியர்களின் நடத்தையை கட்டுப்படுத்தும் பொறிமுறை (mechanism) என்பது தெரியவந்தது. இந்த டெலோமீரஸ் புரதம் ஒரு ஒளியாளி (light switch) போன்றது. சாதாரணமாக எல்லா உயிரணுக்களிலும் காணப்படும் இந்த வஸ்து, பெரும்பாலான சமயங்களில் அணைந்த விளக்காக ஓரமாய் ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது. அபூர்வமாக இந்த விளக்கு ஏற்றப்பட்டால், கத்தரிக்கப்படாமல் டெலோமியர்களை செல் பிரிதலின்போது நகலெடுப்பதெப்படி என்ற ரகசியத்தை ஒரு நிரலாக அது தானிருக்கும் உயிரணுவுக்கு சொல்கிறது. அவ்வளவுதான். இந்த சிறப்பு தீட்சை பெற்ற உயிரணுக்கள் முடிவே இல்லாமல் பிரிந்து வளர்ந்து பிரிந்து வளர்ந்து கொண்டே இருக்கின்றன!
இன்னொரு கோணத்திலிருந்து பார்த்தால் புற்றுநோய் வளர்வதெப்படி என்ற கேள்விக்கும் இதிலிருந்தே விடை கிடைக்கிறது. புற்றுநோய்க்குள்ளும் பல விதங்கள் உண்டு என்றாலும், பெரும்பாலான புற்றுநோய் வகைகள் வருவதன் காரணம் உயிரணு வளர்ந்து பிரியும் செயல்முறையில் ஏற்படும் அபூர்வ தவறுகள்தான். கோடிக்கணக்கான முறை நம் உடலில் செல் நகலிடுதல் நடக்கும்போது, ஜெராக்ஸ் மெஷினில் கோளாறு இருக்கும் சமயத்தில் நாம் பெறும் நகலில் கறைகள் ஏற்படுவதுபோல், செல் நகலிலும் சிறு தவறுகள் வெகு அபூர்வமாக தோன்றுகின்றன. பெரும்பாலான நேரங்களில் இந்த தவறுகள் சில நூறு முறை செல் பிரிவின் வழியாக வளர்ந்தாலும், அத்தோடு நின்று போய் அந்த உயிரணுக்கள் மடிவதோடு காணாமல் போய் விடுகின்றன. அந்த உயிரணுக்கள் பல காலம் வாழும் அவயத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், பொதுவாக பிரச்சினைகள் வருவதில்லை. ஏனெனில் அத்தகைய கறை படிந்த உயிரணுக்கள் திரும்பத்திரும்ப வளராதவரை அவை கண்ணுக்கே தெரியாத கடுகை விட சிறிய கட்டியாய் இருந்துவிட்டு எந்த வித தொந்தரவும் கொடுக்காமல் மறைந்துவிடும். இந்த வகை கட்டிகள் உலக மக்கள் தொகையில் பாதிப்பேருக்கு அவர்கள் உடலில் பலவருடங்களாக இருப்பது சகஜம். ஆனால் இந்த பழுதான உயிரணுக்களில் டெலோமீரஸ் புரதமும் விழித்துக்கொண்டு செயல்பட ஆரம்பித்தால் வந்தது வினை. அந்நிலையில், பழுதுபட்ட அந்த உயிரணுக்கள் முடிவே இல்லாமல் திரும்பத்திரும்ப வளருவதால், அவை புற்றுநோய் கட்டிகளாக கட்டுப்பாடின்றி வளர்ந்து மனித உயிருக்கே ஊறு விளைவிக்கும் நிலை ஏற்படுகிறது. இதனால்தான் சமயங்களில் அறுவை சிகிச்சை செய்து உடலிலிருந்து புற்றுநோய் கட்டிகளை மருத்துவர்கள் நீக்கினாலும், ஹேய்பிலிக் எல்லைகளுக்காப்பாற்பட்ட இந்தக்கட்டி அணுக்கள் ஒன்றிரண்டாவது ஏதாவது ஒரு உடல் மூலையில் ஒளிந்திருந்து தப்பி விட்டாலும், வெகுவேகமாக திரும்பவும் வளர்ந்து நோயாளியை தாக்குகின்றன. இந்த மறுநிகழ்வு (recurrence) வாய்ப்புக்களை நீக்குவதற்க்காக அறுவை சிகிச்சையின்போது, கேடு விளைவிக்கின்ற ஒரு உயிரணுவையும் உடலில் விட்டுவிடக்கூடாது என்று, கட்டியை வெட்டி எடுப்பத்தோடு அதை சுற்றியுள்ள பகுதிகளையும் கவனத்துடன் கொஞ்சம் வெட்டி எறிவது வழக்கம்.
தீயணைப்புத் துறையினர் எரியும் தீயை அணைக்க மூன்று வழிகளை உபயோகிப்பார்கள். ஒன்று வெப்பத்தை குறைப்பது (உதாரணமாக தண்ணீரை கொட்டுவது), இரண்டாவது எரிபொருட்களை அங்கிருந்து நீக்குவது (மரப்பொருட்களோ, துணிமணிகளோ அருகில் இருந்தால் அவற்றை அப்புறப்படுத்துவது), மூன்றாவது பிராணவாயு எரியும் நெருப்பை அடைய விடாமல் தடுப்பது (பெரிய பாத்திரத்தை தீயின் மேல் போட்டு மூடுவது அல்லது பிராணவாயுவை தடுக்கும் நுரையை பீய்ச்சி அடிப்பது). இந்த மூன்று உத்திகளில் எது வெற்றி பெற்றாலும் தீ அணைந்துவிடும் என்பது போல புற்றுநோய் என்ற தீயுடன் போராடுவதற்கும் அதே போன்ற மூன்று உத்திகள் உண்டு. கட்டியை வெட்டி எரிவது எரிபொருளை நீக்குவது போல என்று கொண்டால், மருந்து அல்லது கதிர்வீச்சு சிகிச்சைகளின் மூலம் டெலோமீரஸ் புரதத்தை அணைத்து விடுவது போன்ற உத்தி வெப்பதைக்குறைப்பது போல என்று கொள்ளலாம். தீயணைப்பில் பிராணவாயுவை தடுப்பதற்கு ஈடாக, உயிரணுக்கள் வளரத்தேவையான இரத்தம் மற்றும் ஊட்டச்சத்து வழங்கலைத் தடை செய்வதும் ஒரு உத்தியாக தற்போது கையாளப்பட்டு வருகிறது. இந்த மூன்றாவது உத்தியில் நிறைய ஆர்வமுள்ளவர்கள் காலம் சென்ற டாக்டர் ஜூடா போக்மன் என்ற ஆய்வாளரின் இரத்தத்தடுப்பு (Angiogenesis) வழிமுறைகளைப்பற்றி வலையில் தேடிப்படிக்கலாம். இப்போதெல்லாம் நோயாளிகளின் சிறுநீரை சோதனை செய்யும்போது அதில் கிளர்வுற்ற டெலோமீரஸ் புரதம் இருக்கிறதா என்றும் பார்க்கிறார்கள். இருந்தால் அது புற்றுநோய்க்கு ஒரு அறிகுறியாக இருக்கலாம் என்பதால், அந்த நபரை மேலும் விரிவான புற்றுநோய் சோதனைகளுக்கு செல்லுமாறு பணிக்கிறார்கள்.
The Cell Cycle & Mitosis_Interpahse_Telophase_Anaphase_Prophase_Nucleus_Chromosomes

எலிகளில் ஆரம்பித்து…

ஒரு வழியாக இந்த விஷயங்கள் எல்லாம் புரிந்த உடன், ஆய்வகங்கள் இந்த டெலோமீரஸ் புரதத்தை நம் தேவைக்கேற்றது போல் விழிப்புறச்செய்வதும் தூங்கவைப்பதும் எப்படி என்ற ஆய்வில் ஈடுபட்டு சில மருந்துகளையும் கண்டு பிடித்திருக்கின்றன. இந்த மருந்துகளை கொடுத்தால் பீட்ரி தட்டில் வளரும் பழுதடையாத நல்ல உயிரணுக்கள் கூட ஹீலா செல் வரிசையின் வாரிசுகள் போல ஹேய்பிலிக் எல்லைகளைத்தாண்டி தொடர்ந்து வளர ஆரம்பித்து விட்டன! உடனே சம்பிரதாயமான அடுத்த கட்டமாக, ஆய்வகங்கள் வெள்ளெலிகளுக்கு இதே மருந்துகள் கொடுத்து வளர்த்து பார்த்தன. எதிர்பார்த்தது போலவே இந்த எலிகளும் வயது முதிர்ச்சி தெரியாமல் இரண்டு மூன்று மடங்கு நீண்ட ஆயுளுடன் வாழ்ந்து காட்டின. சாதாரணமாக வயதான காலத்தில் வரும் ஞாபகமறதி போன்ற குறைகளும் இந்த எலிகளை நெருங்க முடியவில்லை. எனவே அடுத்து இந்த மருந்துகளை குரங்குகளுக்கும் இறுதியில் மனிதர்களுக்கும் கொடுத்து வாழ்நாட்களை எவ்வளவு தூரம் நீட்ட முடியும் என்ற கணிப்பு தற்போது நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.
மகப்பேற்றில் உள்ள ஆபத்துகளையும், தட்பவெப்பநிலை மற்றும் விலங்குகளை சமாளிப்பதில் இருக்கும் ஆபத்துகளையும் நீக்கி, நாம் ஒருவரை ஒருவர் கொன்றுகொள்ளும் அபத்தத்தையும் நிறுத்தி, தொற்றுநோய்களை ஒழித்துவிட்டு நிமிர்ந்தால், நாம் நீடூழி வாழ தேவையான உயிரணு வளர்ச்சியே, ஒரு நாள் இல்லாவிட்டால் ஒரு நாள் நம்மை புற்றுநோயில் கொண்டு தள்ளும் சாத்தியக்கூறுகள் நமக்கு வயதாக ஆக தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போவது புரிகிறது. சில புதிய ஆராய்ச்சி முடிவுகள், நவநாகரீக வாழ்முறையுடன் சேர்ந்துவரும் மன அழுத்தங்களும் பயங்களும் பதற்றங்களும் டெலோமியர் நுனிகளை உருக்குலைப்பதாக அறிவிக்கின்றன. எனவே வாழ்நாட்களை நீட்டிக்க வேண்டிய உத்திகளில் எந்தவித அழுத்தங்களும் இல்லாத ஒரு அமைதியான வாழ்வை நாடுவதும்‌ முக்கியமான ஒன்று.
புதிதாக இந்த வருடம் வந்துள்ள ஒரு ஆய்வுக்கட்டுரையின்படி [3] ஹென்றியேட்டா லாக்ஸ் நமக்கு கொடுத்திருக்கும் ஹீலா செல் வரிசை முடிவின்றி வாழ்ந்து வருவது போலவே, பதினோராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு நாயின் உயிரணுக்கள் இன்று உலகம் முழுதும் வாழும் பல்வேறு வகையான நாய்களிடம் ஒரு நாய்ப்புற்றுநோய் வடிவில் வளர்ந்துகொண்டே வருவது கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. நாம் முன்பு பார்த்த உயிரணு பிழைகள் ஒரு நாயின் வாழ்நாளில் நடைபெறும் பல கோடி செல் பிரித்தலின் இடையே ஒரு சில நூறு முறைகள் நிகழ்வதே சாத்தியம். ஆனால் இந்த நாய் புற்றுநோய் கட்டியில் காணப்படும் உயிரணுக்களுக்குள் இருபது லட்சம் பிழைகளுக்கு மேல் இருப்பதிலிருந்து கணக்கிட்டுப்பார்த்தால் இந்த செல் வரிசை பதினோராயிரம் ஆண்டுகளுக்கு மேலானது என்பது நிச்சயமாய் தெரிகிறது. எனவே ஆயிரம் ஆண்டுகள் என்ன, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு மேல் கூட வாழ்வது சாத்தியம் என்கிறது விஞ்ஞானம்.
ஆய்வுகள் தொடர்கின்றன. விலங்கினங்களைப்போல் இல்லாமல் மனிதர்களிடையே எந்த மருந்துகளைப்பற்றிய ஆய்வும் ஆரம்பிக்கும் முன் அதனால் சோதிக்கப்படுபவர்களுக்கு தீங்குகள் ஏதும் நேர்ந்துவிடாது என்று உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியதும், அரசாங்கங்களிடையே தேவையான அனுமதிகளைப்பெறுவதும் சட்டப்படி அவசியம். எனவே இந்த ஆராய்ச்சி மனிதர்கள் மேல் நடத்தப்படும்போது சற்று மெதுவாகத்தான் தொடரும்.
“புனரபி ஜனனம், புனரபி மரணம்” என்று இந்து மதம் வாழ்வின் மாயச்சுழலை பற்றி சொல்வது போல, முடிவே இல்லாத வாழ்வையும், விரைவில் மரணத்தை தர விழையும் புற்றுநோயையும் இறுதியில் உயிரணு அளவில் நிர்வகிப்பது என்னவோ டெலோமீரஸ் போன்ற ஒரே விஷயம்‌தான். கொஞ்சம் உட்கார்ந்து யோசித்துப்பார்தால் இது ஒரு அழகான கவிதை போன்ற வேதாந்தம் கலந்த ரகசியம் என்பது இந்த வருடமே நமக்குப்புரியும். அதையடுத்து “அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகுத்திக் குறுகத் தரித்த குறள்” என்று ஔவையார் திருக்குறளை பற்றி பாடியதைப்போல், இந்த உயிரணுக்களுக்குள் அடங்கியிருக்கும் எல்லா ரகசியங்களையும் புரிந்து கொண்டு நாம் பாராட்டுப்பா பாட வேண்டும் என்றால், அதற்கு நமக்கு அடுத்த ஆயிரம் வருடங்கள் கூட போதாது என்றுதான் தோன்றுகிறது.
குறிப்புகள்:
2. மனிதர்களின் தோல் நிறத்தை உபயோகித்து அவர்களின் இனத்தை குறிப்பது நாகரீக வழக்கிலிருந்து மெல்ல ஒழிய ஆரம்பித்திருக்கிறது. அதற்கு பதிலாக அந்த இன மக்கள் பூமியின் எந்த பகுதியில் இருந்து உருவானவர்கள் என்பதை இனங்களை குறிப்பிட உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். எனவே முன்னெல்லாம் கறுப்பர்கள் என்று சொல்லப்பட்ட மக்கள் இப்போது அமெரிக்காவில் ஆப்ரிக்கஅமெரிக்கர்கள் என்று சொல்லப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment