First published by Solvanam.com
ஒரு பெரிய நகரத்தில் வாழ்வதால் ஒளி மாசுபாடு (Light Pollution) காரணமாக இரவில் வான் நட்சத்திரங்களை பார்த்து பழக்கமற்ற என் நண்பரின் குழந்தை ஒன்று, ஓரிரவு அபூர்வமாக வானில் நட்சத்திரங்களை பார்த்தபோது, வானம் தான் சமீபத்தில் பார்த்த ப்ளனடேரியம் (Planetarium) போலவே இருக்கிறது என்று சொன்னது வேடிக்கையாய் இருந்தது. அதுபோல் சில சமயங்களில் இயற்கையாக உருவாகியிருக்கும் சில விஷயங்களை நமக்கு பரிச்சயமான சில செயற்கை விஷயங்களோடு ஒப்பிட்டு புரிந்து கொள்வது எளிதாக இருப்பதில் ஆச்சரியம் இல்லை.
அப்படிப்பார்த்தால், மூளையை உங்கள் மேஜை கணினிக்கும், நமது புலன்களை கீ போர்டு, மவுஸ், காமிரா போன்ற கணினியுடன் இணைந்து இயங்கும் கருவிகளுக்கு இணையாகவும் உருவகிக்கலாம். கணினிகளில் நிறைய யுஎஸ்பி (USB) துறைமுகங்கள் அமைக்கப்பட்டு புலன் கருவிகளை இணைத்துக்கொள்ள வழி செய்யப்பட்டு இருப்பதைப்போல் மூளையிலும் வரும் செய்திகளைப்பெற்றுக்கொள்ள குறைந்தது ஐம்புலன்கள் என்ற ஐந்து துறைமுகங்கள் காத்திருக்கின்றன. ஒரு மவுஸ் கணினியுடன் இணைக்கப்படும் யுஎஸ்பி போர்ட்டில் (USB Port) அதற்கு பதில் ஒரு ஜாய் ஸ்டிக் (Joy Stick) அல்லது தொடுபலகை (Touch Pad) ஒன்றை இணைத்தும்கூட நிலைக்காட்டியை (Cursor) நாம் நகர்த்த இடும் கட்டளைகளை கணினிகள் புரிந்துகொண்டு செயல்படுவதைப்போல் மூளையாலும் செயல்பட முடிகிறது. என்ன, அந்த ஜாய் ஸ்டிக், தொடுபலகை, மவுஸ் என்று கணினியுடன் இணைக்கப்படும் ஒவ்வொரு விதமான உணர்விகளையும் கணினிகள் புரிந்துகொள்ள பல மென்பொருள் பொறியாளர்கள் டிரைவர் (Driver), அப்ளிகேஷன் (Application) என்று நிரலிகள் எழுதி அவற்றை கணினிகளில் ஓட்டி எல்லாம் ஒழுங்காக வேலை செய்கின்றனவா என்று சோதித்து மாதக்கணக்கில் மெனக்கிட வேண்டும். இயற்கை உயிரியலில் பரிணாமவளர்ச்சி என்ற பொறியாளரைக்கொண்டு இந்தக்காரியங்களை எல்லாம் எப்போதோ செய்து முடித்திருப்பதுபோல் தெரிகிறது! துரதிருஷ்டவசமாக நமக்கு எளிதாக புரியும்படியான பயனர் கையேடு (User Guide), வடிவமைப்பு விவரக்குறிப்பு (Design Specification) எதையும் இயற்கை மூளையோடு சேர்த்து நமக்கு கொடுக்கவில்லை. எனவே நாமாகவே தட்டுத்தடுமாறி அந்த கொசகொசப்பு எப்படி இயங்குகிறது, வேறு என்னென்ன உணர்விகளை அதன் துறைமுகங்களில் இணைக்கலாம் என்று புரிந்து கொள்ளவேண்டி இருக்கிறது!
குழந்தைகள் பெரியவர்கள் முதுகில் எதையாவது எழுதி நான் என்ன எழுதினேன் என்று கேட்டு கண்டுபிடிக்கச்சொல்லி விளையாடுவது நம் எல்லோருக்கும் பழகிய விஷயம். 1960களிலேயே இதை எந்த அளவு துல்லியமாக செய்ய முடியும் என்று ஆராய ஒரு சாய்வு நாற்காலி தயாரித்து அதன் முதுகு பக்கத்தில் 100×100 என்கிற கணக்கில் மழுங்கிய பிளாஸ்டிக் ஆணிகளை அமைத்தார்கள். நாற்காலியில் சட்டை போடாமல் ஒருவரை உட்கார வைத்து, இந்த மேட்ரிக்ஸ் அமைப்பில் உள்ள குமிழ்களை பின் புறத்தில் இருந்து அவர் முதுகை நோக்கி தள்ளி, அருகிலுள்ள படங்களில் காணப்படும் பிக்ஸெலெடெட் (Pixelated) உருவங்களை முதுகில் தோன்றும் அழுத்தங்களைக்கொண்டு அவரால் புரிந்து கொள்ள முடிகிறதா என்று சோதித்தார்கள். முதலில் கொஞ்சம் சிரமமாக இருந்தாலும் சில மணி பயிற்சிக்குப்பின் பொதுவாக எல்லோராலும் தங்கள் கண்களை மூடிக்கொண்டு முதுகில் தோன்றும் அழுத்தங்களை உணர்ந்து தங்கள் மனக்கண்களில் எளிதான உருவங்களை பார்க்க முடிந்தது! மோனாலிசாவின் மர்மப்புன்னகையை புரிந்து ரசிக்க இந்த அமைப்பின் துல்லியம் (Resolution) போதாது என்றாலும், இந்த பரிசோதனையின் மூலம் நன்றாக வேலை செய்யும் கண்களை கொண்டவர்கள் கூட தொடு உணர்வின்மூலம் “பார்க்க முடியும்” என்று தெரிந்தது.
இதை அடுத்து சாய்வு நாற்காலியில் சாய்ந்து இருக்கும்போது மட்டும் இல்லாமல் மற்ற நேரங்களிலும் ஸ்பரிச உணர்வை உபயோகித்து பார்ப்பது எப்படி என்று 80களில் யோசித்துக்கொண்டிருந்த விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தைச்சேர்ந்த டாக்டர். பால் பாக்கி ரீட்டா (Paul Bach-y-Rita), முதுகைவிட தொடு உணர்த்திறன் மிகவும் அதிகமான நாவினை இதற்கு உபயோகிக்க திட்டமிட்டார். வைகேப் (Wicab) என்ற ஒரு சிறிய கம்பெனியை ஆரம்பித்து அதன் வழியே இதற்காக அவர் வடிவமைத்த சிறிய மெல்லிய சர்க்யூட் போர்டு உங்கள் நாக்கின் மேல் பொருந்த வல்லது. 25×25 புள்ளிகள் கொண்ட அந்த சர்க்யூட் போர்டு ஒயர்களால் ஒரு கணினியுடன் இணைக்கப்பட்டு, மெல்லிய மின் அதிர்வுகளை அந்த தொடுபுள்ளிகளின் (Contact Points) வழியாக நாக்கிற்கு அனுப்பியது. லேசான, சும்மா ஒரு 9 வோல்ட் பேட்டரியை நக்கினால் நாவில் தோன்றுமே, அத்தகைய உணர்வு. அவ்வளவுதான். அந்த மேட்ரிக்ஸின் வெளி விளிம்பில் இருக்கும் புள்ளிகள் மட்டும் மின்சாரத்தை வழங்கி அதிர்ந்தால், மூளையால் ஒரு சதுரவடிவை பார்க்க முடிந்தது!
அந்த ஆரம்ப கட்டங்களைத்தாண்டி இப்போது சென்ற இதழில் சொன்னதுபோல் ஒரு சிறிய காமிரா வழியே வரும் பிம்பங்களை கருப்பு வெள்ளை சாம்பல் நிற பிக்ஸல் படமாக மாற்றி நாக்கிற்கு அனுப்புகிறார்கள். கருப்பு நிறத்தைக்குறிக்க மின் அதிர்வு ஏதும் கிடையாது. சாம்பல் நிறத்துக்கு லேசாகவும் வெள்ளை நிறத்துக்கு சற்று அதிகமாகவும் மின் அதிர்வுகளை நாவிற்கு அனுப்பினால், மூளையால் அதை புரிந்து கொள்ள முடிகிறது. பிறவியிலேயே கண் தெரியாதவர்கள் மட்டுமின்றி, சாதாரணமாக பார்வை உள்ள நீங்களும் உங்கள் கண்களை கட்டிக்கொண்டு, இந்த சர்க்யூட் போர்டை வாயில் வைத்து லாலிபாப் போல சப்ப ஆரம்பித்தால், கிடைக்கும் சமிக்ஞைகளை ஓரிரு மணி நேர பயிற்சியிலேயே புரிந்துகொண்டு சுவற்றில் மோதிக்கொள்ளாமல் புதிய இடங்களில் நடக்கவும், தரையில் கருப்பு பெயிண்ட்டால் வரையப்பட்ட கோடுகளுக்குள் நடக்கவும் பழகி விடுவீர்கள்!
இந்த முறையை பயன்படுத்தி கோச்சடையான் படமெல்லாம் நிச்சயம் பார்க்க முடியாது என்றாலும், இந்த ஆய்வுகளின் மூலம் மனித மூளையின் கிரகிப்புத்தன்மை பற்றி இன்னும் கொஞ்சம் தெரிய வருகிறது. மெக்ஸிகோ தேசத்தில் பிறந்து அமெரிக்காவில் பணி புரிந்து வந்த டாக்டர். பாக்கி ரீட்டா 2006ல் காலமாகி விட்டார் எனினும், அவர் தொடங்கிய இந்தக்கம்பெனி இப்போது பல நாடுகளில் ப்ரெய்ன் போர்ட் (Brain Port) V100 என்ற பெயரில் இந்த கருவியை கண் தெரியாதவர்களுக்காக விற்று வருகிறது.
இன்னொரு இஸ்ரேலிய நிறுவனம், இதே தத்துவத்தை உபயோகித்து வடிவமைத்திருக்கும் VIA என்கிற பார்வையற்றவர்களுக்கான கருவி, நாகரீக அலங்கார நகை போல (Fashion Accessory) அமைக்கப்பட்டு இருக்கிறது. ஜோடியாக விற்கப்படும் இவற்றை கைக்கு ஒன்றாக அணிந்து கொண்டால், வழக்கமான கைத்தடிக்கு தேவை இல்லாமல் பார்வையற்றவர்கள் நடமாட முடியும். இதிலேயே GPS தொழில்நுட்பமும் இணைக்கப்பட்டு இருப்பதால், வாய் வார்த்தையால் எங்கே போக வேண்டும் என்று சொல்லிவிட்டால் போதும். எதிரே வரும் இடையூறுகளுக்கேர்ப்ப இது இரண்டு மூன்று விதங்களில் நம் கைகளைச்சுரண்டி போக வேண்டிய இடத்திற்கு வழி காட்டும்!
பிரைல் (Braille) முறையில் பார்வையற்றவர்கள் படிப்பது கூட தொடு உணர்வை பார்வை திறனுக்கு பதிலாக பயன் படுத்துவதற்கு ஓர் உதாரணம்தானோ என்று நினைக்கலாம். அதில் ஒரு வேறுபாடு பிரைல் புத்தகங்களைப்படிக்கும்போது பார்வையற்றவர்கள் எழுத்துக்களை பார்ப்பதில்லை. தாம் தொடுவது என்ன எழுத்து/வார்த்தை என்று நேராகவே புரிந்துகொண்டு விடுகிறார்கள். எனவே அதை இன்னொரு விதமான புதிய திறனாக எடுத்துக்கொள்ளலாம். பார்வை சம்பந்தப்பட்ட சமிக்ஞைகளை கண்கள் இல்லாவிட்டால் தொடு உணர்வின் மூலமாகத்தான் பெறவேண்டும் என்றும் ஏதும் கட்டாயம் இல்லை. வௌவால்களைப்போல நம்மாலும் எதிரொலியின் உதவியுடன் பார்வைத்திறன் இல்லாமல் நடமாட முடியும் என்பது இந்த யூட்யூப் வீடியோவைப்பார்த்தால் புரியும்! இதில் நமது கண்கள் மூளைக்கு அனுப்ப வேண்டிய செய்திகளை செவிகள் வழியே மூளைக்கு அனுப்புகிறோம்!
நமது காதுகளுக்குள் இருக்கும் மூன்று அரைவட்ட கால்வாய் அமைப்பு ஒரு முந்திரிப்பருப்பு சைஸ்தான். பக்கத்தில் உள்ள படத்தில் பழுப்பு நிற காது மடலுக்கு வலது புறம் சற்று சாயம் போனதுபோல் சிறியதாய் காணப்படும் அதே வளைய அமைப்புதான் பெரிதாக்கப்பட்டு வெளிர்சிவப்பு நிறத்தில் பாகங்கள் குறிக்கப்பட்டு மேலே உட்கார்ந்திருக்கிறது. அதற்குள் குழந்தைகளின் கிலுகிலுப்பையில் இருப்பது போல் உருண்டோடிக்கொண்டிருக்கும் சில துகள்களை வைத்துக்கொண்டு அங்கிருந்து வரும் சமிக்ஞைகளை பகுத்தறிந்து, நாம் நிற்கிறோமா, சுற்றுகிறோமா, தலைகீழாக தொங்குகிறோமா என்பது போன்ற வெளிநோக்குநிலை (Spatial Orientation) விவரங்களை, இருட்டில் நம் கண்களை கட்டிவிட்டாலும்கூட மூளை அறிந்து கொண்டுவிடுகிறது. ஆனால் சில சந்தர்ப்பங்களில் அந்த துகள்கள் எளிதாக உருண்டோட முடியாத நிலமை ஏற்படுவதுண்டு. உதாரணமாக கடுமையான ஜலதோஷத்தினால் அல்லது சாப்பிடும் சில மருந்துகளால் இந்த குழாய்கள் வீங்கி விடுவது ஒரு காரணம், அப்படிப்பட்ட நிலையில் அந்த துகள்கள் சுலபமாக உருள முடியாத சந்தர்ப்பங்களில் நமது சமநிலை உணர்வு (Sense of Balance) தவறிப்போய் சரியாக நடக்கக்கூட முடியாமல் தடுமாறுவோம்.
மிட்ஷல் டெய்லர் என்பவர் பாக்கி ரீட்டாவின் ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்த ஒரு சக ஆய்வாளர். இவருக்கு பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னால் ஒருமுறை உள் காதில் வந்த ஒரு தொற்றுநோய் (Inner ear infection) தற்காலிகமாக அவருடைய பேலன்சை ஒழித்து எரிச்சலூட்டவும், இந்த சப்பு மிட்டாய் கருவியை கொண்டு ஏதாவது சமாளிக்க முடியுமா என்று யோசித்தார். உடனே சாதாரணமாக ஒரு காமிராவை இதனுடன் இணைத்து விளையாடிக்கொண்டிருந்த அவரது ஆய்வக சகாக்கள், காமிராவை கழற்றிவிட்டு அதற்கு பதில் வேக மாறுபாடுகளை உணரும் கருவி (Accelerometer) ஒன்றை அதனுடன் இணைத்தனர். இப்போது இந்த ப்ரெய்ன் போர்ட் கருவியை வாயில் போட்டுக்கொண்டு டெய்லர் ஒழுங்காக நின்று கொண்டிருந்தால் நாம் நான்கு பத்திகளுக்கு முன் பார்த்த அந்த சதுர மின் அதிர்வு அவர் நாக்கில் அசையாமல் நின்றது. அவர் இடது அல்லது வலது பக்கமாகவோ அல்லது முன்பின்னாகவோ சாய்ந்தால் நாக்கில் தெரிந்து கொண்டிருக்கும் சதுர மின் அதிர்வும் அதே பக்கம் வழுக்கிக்கொண்டு நகர ஆரம்பித்தது! அவ்வளவுதான். வெகுவிரைவில் மூளை அதுவாகவே, “அடேடே, காதிலிருந்து வந்து கொண்டிருந்த இந்த செய்தி நின்று போய்விட்டதே என்று நினைத்திருந்தேன். இப்போது இது வாய் வழியாக வருகிறது. பேஷ்..பேஷ்”, என்று புரிந்துகொண்டு சமநிலை உணர்வை திரும்ப கொண்டுவந்துவிட்டது!
இந்த பேலன்ஸ் புதுப்பித்தலை பற்றி புரிந்து கொள்ளும்போது, டெய்லரின் கண் பார்வையில் எந்த மாற்றமும் இல்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதிலிருந்து தெரிவதென்னவென்றால் நாக்கில் நிலவும் தொடு உணர்வு என்ற துறைமுகத்தின் வழியே பார்வை சம்பந்தப்பட்ட சமிக்ஞை சரக்கை மட்டும்தான் மூளைக்கு ஏற்றுமதி செய்ய முடியும் என்பதில்லை. சமநிலை உணர்வு சம்பந்தப்பட்ட சமிக்ஞை சரக்கையும் இதே துறைமுகத்தின் வழியே அனுப்பி வைக்க முடியும். ஆமாமாம், புரிகிறது என்று நாம் சொல்வதற்குள் மூளையின் இன்னொரு மூலையில் ஒளிந்திருந்த ஒரு புதிய திறன் வெளிப்பட்டது.
ஷெரில் ஷில்ட்ஸ் என்ற பெண்மணி உடம்பு சரியில்லாத போது சாப்பிட்ட ஒரு அண்ட்டய்பயாடிக் (Antibiotic) மருந்து அவருக்கு ஒத்துக்கொள்ளாமல் போய் அவருடைய காதுக்குள் ஒரு பகுதியை சேதப்படுத்த, அவரும் பேலன்ஸ் இல்லாமல் நடக்கத்தடுமாறிக் கொண்டு இருந்தார். பாக்கி ரீட்டா அவரை ஆய்வகத்துக்கு அழைத்து இந்தக்கருவியை அணிந்து கொள்ளச்சொல்லி பரிசோதித்தபோது உடனேயே அவருக்கும் பேலன்ஸ் திரும்ப வந்ததில் ஆச்சரியம் இல்லை. ஆனால் அவர் அந்த Accelerometer தொப்பி, வாயில் வைத்துக்கொண்டு இருந்த லாலிபாப் எல்லாவற்றையும் கழட்டி வைத்தபின்பும் கொஞ்ச நேரத்திற்கு பேலன்ஸ் உணர்வு தொடர்ந்தது! இன்னும் கொஞ்சம் பரிசோதனைகள் நடத்தியதில், ஷெரில் எத்தனை நேரம் இந்த கருவியை உபயோகிக்கிறாரோ, ஏறக்குறைய அதே அளவு நேரம் இந்த கருவிகளை நீக்கிய பின்னும் பேலன்ஸ் உணர்வு ஒரு எஞ்சிய விளைவாக (Residual Effect) நிலைத்திருந்தது தெரிய வந்தது! திரும்பத்திரும்ப முயற்சித்ததில், அந்த எஞ்சிய விளைவு நீண்டு கொண்டேபோய், இப்போது இந்த சிகிச்சைக்கு தினப்படி அவசியம் ஏதும் இல்லாமல் ஷெரில் தனது பேலன்ஸ் உணர்வை திரும்ப பெற்று விட்டார். இந்த யுட்யூப் வீடியோவில் ஒரு காலத்தில் ஒழுங்காக நிற்கவே தடுமாறிய அவர் இப்போது குஷியாய் தானாகவே சைக்கிள் ஓட்டிக்கொண்டு இருப்பதைப்பார்க்கலாம்! இது எப்படி சாத்தியம் என்றால், மூளை பழுதாகிப்போன அந்த ஒரிஜினல் பாதையை விட்டுவிட்டு இதே செய்திகளை வேறொரு வாயில் வழியாக திரும்ப பெற்று அதை உணர்ந்தறிய கற்றுக்கொண்டு இயங்க ஆரம்பித்து விட்டது என்கிறார்கள்!
சென்ற இதழில் நாம் சொன்னதுபோல், ஒரு புலனை நாம் இழக்கும்போது வேறு ஒரு வழியில் அந்த புலனை திரும்பக்கொண்டு வருவது ஒரு புறம் இருக்க, இத்தகைய முறைகளை உபயோகித்து இல்லாத புதிய திறன்களை கொடுத்து மனித இனத்தை மேம்படுத்துவது இன்னும் சிலாகிதம். இந்த புதிய சிந்தனையின்படி எங்கெங்கு யாருக்கு எப்படிப்பட்ட புதிய திறன்களைக்கொடுப்பது மிகவும் உபயோகமாக இருக்கும் என்று சோதித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஒரு சுவையான உதாரணம்? இருட்டில் கூட உள் காதில் இருந்து வரும் சமிக்ஞைகளைக்கொண்டு மூளை நமக்கு பேலன்ஸ் தவறாமல் பார்த்துக்கொள்ளுகிறது என்று சொன்னோமல்லவா? அது சரிதான் என்றாலும், ராணுவ விமானிகள் மிக வேகமாக விமானங்களை ஒட்டி, செங்குத்தாக மேலேறி கீழிறங்கும்போது புவி ஈர்ப்பு விசையில் ஏற்படும் திடீர் மாறுதல்களால் இந்த பேலன்ஸ் தடுமாறும். வெளிச்சம் இருக்கும்போது கண்கள் வழியே வரும் சுற்றுப்புறத்தைப் பற்றிய செய்திகளைக்கொண்டு இந்த தடுமாறல்களை விமானிகளின் மூளை எளிதாக சமாளித்து விடும். ஆகவே அவர்களின் வெளிநோக்குநிலை (Spatial Orientation) பாதிக்கப்படாமல் தப்பித்து விடுகிறார்கள். ஆனால் இதையே இருட்டில் செய்தால் ததுங்கினதோம்தான்.
இருட்டில் இந்த பயிற்சி எல்லாம் ஏன் செய்யவேண்டும் என்று கேட்கலாம். போரில் எதிரி விமானமோ ஏவுகணையோ துரத்தினால் இரவாக இருந்தாலும் தப்பித்தாக வேண்டும் இல்லையா? அதற்குத்தான் இந்தப்பயிற்சி. ஆனால் அந்த வேகத்தில் இருட்டில் தன் பேலன்ஸ் தவறி, நோக்குநிலை (Orientation) குழம்பி விமானி சில வினாடிகள் தடுமாறினால் கூட உயிரிழக்க நேரும். அவர்களுக்கு நாக்கில் வைத்துக்கொள்வதற்குபதில் கைகளில் அணிந்து கொள்ள ஒரு உறையை கொடுத்து, விமானத்தின் நிலையை பொறுத்து அவர்களின் புறங்கையில் மின் அதிர்வு கிச்சுக்கிச்சு மூட்டி மூளைக்கு சமிக்ஞைகளை அனுப்புகிறார்கள். விமானம் ஓட்ட எந்த பயிற்சியும் பெறாதவர்கள் கூட சில நிமிடங்களிலேயே இந்த உறையை அணிந்து கொண்டவுடன் சிமுலேட்டோர்களில் (Simulator) கண்ணைக்கட்டிக்கொண்டு விபத்துக்கள் இல்லாமல் அட்டகாசமாய் விமானங்களை .எங்கேயும் போய் இடிக்காமல் ஓட்டுவதாக கேள்வி! ஃபீல் ஸ்பேஸ் (Feel Space) பெல்ட் கட்டிக்கொண்டு இருப்பவர்கள் போலவே இவர்களும் தான் எப்படி பார்வைத்திறனே தேவை இல்லாமல் விமானம் ஓட்டும் திறமைசாலியான விமானியானோம் என்று கான்ஷியஸாக சரிவரப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும், விமானத்தை எங்கும் இடிக்காமல் வழி நடத்துவத்தில் மட்டும் என்னவோ சூரர்களாய் இருக்கிறார்கள்! இதே போல் ஆழ்கடலில் இருட்டில் நீந்தி பணி புரிய வேண்டியவர்களைப் (Deepsea Divers) பற்றி யோசிக்கலாம். தண்ணீருக்குள் இருக்கும்போது புவி ஈர்ப்பு விசையின் பாதிப்பு இருக்காது என்பதால் இருட்டில் இவர்கள் பணி புரியும்போது எது எந்தப்பக்கம் என்று புரியாமல் குழம்ப நிறைய வாய்ப்புகள் உண்டு. இவர்களுக்கும் இத்தகைய உணர்விகள் மூலம் கடலின் மேற்பரப்பு எந்தப்பக்கம் போன்ற சமிக்ஞைகளை தொடு உணர்வின் மூலம் மூளைக்கு சொல்ல முயற்சி நடந்து கொண்டு இருக்கிறது!
நாம் தன் உணர்வோடு (consciousness) யோசித்து செயல்படத்தேவை இல்லாமல் அன்கான்ஷியஸாக மூளை எவ்வளவோ பணிகளை நாள் முழுதும் செய்கிறதல்லவா, அந்த வகையில் இந்த புதிய திறன்களும் சேர்ந்து விடுகின்றன. மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு ஆய்வு சரளமாக இரண்டு மொழிகள் பேசுபவர்களுக்கு அல்சைமெர்ஸ் (Alzheimer’s) போன்ற மூளை சம்பந்தப்பட்ட வியாதிகள் வயதான காலத்தில் வந்தாலும் சுமார் ஐந்து வருடங்கள் தாமதமாக வருகின்றன என்று அறிவித்தது. இரண்டு மொழிகளை சரளமாக உபயோகிப்பது ஒரே மொழியை உபயோகிப்பவர்களுடன் ஒப்பிடும்போது, நம்மை அறியாமல் நாம் மூளைக்கு கொடுக்கும் உடற்பயிற்சிக்கு ஈடானது. அப்படி பயிற்சி பெரும் மூளை நீண்ட நாட்கள் நன்கு இயங்குவதில் ஆச்சரியமில்லை. பல மொழி பயிற்சியோ, பல திறன் பயிற்சியோ, வேறு புது விதமான சவால்களோ, எது வந்தாலும் சமாளித்து, கொஞ்ச காலத்தில் நிபுணத்துவம் பெற்று பணிசெய்ய மனித மூளை உற்சாகமாக காத்திருப்பது தெளிவாக தெரிகிறது.
நம் மூளையைப்பற்றிய நமது புரிதல் இன்னும் மேம்பட மேம்பட அதன் பல மூலைகளில் ஒளிந்திருக்கும் பல புதிய திறன்களைக்கண்டு நாமே வியந்து நிற்கப்போகிறோம்!
(முற்றும்)
படங்கள்: நன்றி விக்கிபீடியா மற்றும் பல வலைதளங்கள்
படங்கள்: நன்றி விக்கிபீடியா மற்றும் பல வலைதளங்கள்
No comments:
Post a Comment