Sunday, January 19, 2014

அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை - பாகம் 3

I published this article first on the Solvanam site. This is second section of part 2.

சமகால சிக்கல்கள்
பலவித கலாச்சார, பொருளாதார சமுதாய மாற்றங்களை ஆமிஷ் சமூகம் எப்படியோ சந்தித்து சமாளித்து வந்தாலும், புதுப்புது சவால்கள் வராமலில்லை. காலம்காலமாக ஆமிஷ் குடும்பங்கள் பெரும்பாலும் விவசாயம் செய்துதான் வாழ்ந்து வருகின்றனர். இருநூறு வருடங்களுக்குமுன் ஏறக்குறைய எண்பது சதவீத அமெரிக்கர்கள் விவசாயிகளாகத்தான் இருந்தார்கள். போன நூற்றாண்டின் எயந்திரமயமாக்கலுக்கு பின், இன்றைய தேதியில் அமெரிக்க விவசாயிகளின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில்  வெறும் இரண்டே சதவீதம்தான். இந்த நிலையில் இன்னும் பழைய கால முறைப்படியே விவசாயம் செய்து ஆனால் பன்னாட்டு நிறுவனகளுடன் போட்டியிட்டு பொருளீட்டுவது கடினமாகதான் இருக்கிறது. ஆமிஷ் குடும்பங்கள் பிற சமூகங்களில் இருந்து மிகவும் பிரிந்து வாழ்ந்தாலும் அவர்களும் வருமான வரி கட்டுவதில் இருந்து ஆரம்பித்து எல்லா அமெரிக்க சட்டங்களுக்கும் உட்பட்டவர்கள்தான். எனவே பல குழந்தைகளை பெற்ற ஒரு ஆமிஷ் குடும்பம் தகப்பனாரின் நிலத்தை மகன்களுக்கு பிரித்து கொடுக்கும்போது ஒவ்வொரு மகனுக்கும் கிடைக்கும் பங்கு நிலம் ஒரு லாபகரமான பெரிய பண்ணை நடத்தும் அளவுக்கு பெரியதாய் அமைவதில்லை. நிலம், மனை விலை ஏறிக்கொண்டே போவதாலும், ஆமிஷ் குடும்பங்கள் பெரிய பணக்காரர்களாய் இருக்க வழியே இல்லை என்பதாலும் புதிதாக பெரிய நிலங்களை வாங்குவதும் கடினம். எனவே சில ஆமிஷ் சமூகங்கள் நிலம் விலை குறைவாக இருக்கும் வேறு மாநிலங்களுக்கு குடி பெயர்ந்து அங்கே புதிய ஆமிஷ் குடியேற்றங்களை அமைக்க முடியுமா என்று பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். வேறு பல ஆமிஷ் இளைஞர்கள் பரம்பரையாய் செய்துவரும் பண்ணை விவசாயதொழிலை விட்டுவிட்டு ஊரில் இருக்கும் ஆங்கிலேய தொழிற்சாலைகளில் பணிபுரிந்து பொருளீட்டுகிறார்கள்.



ஆமிஷ் சமூகம் இந்திய சமூகத்தை போல ஆண்களை பிரதானப்படுத்தும் சமூகம்தான். ஆண்கள் அறிவு முதிர்ந்த அன்பான வன்முறையற்ற அப்பாக்களாகவும், பெண்கள் ஆண்களுக்கு அடிபணிந்து வாழ்பவர்களாகவும் அன்பான அம்மாக்களாகவும் இருக்கவேண்டும் என்பது அவர்கள் நியதி. ஆனால் பாதை தவறிய ஒரு கணவன் தன் மனைவியை அடித்தால், அதை தடுக்க ஆமிஷ் சமூகம் விழுந்தடித்துக்கொண்டு வருவதாகத்தெரியவில்லை. அதற்கு பதில் பெண்களை விட்டு கொடுத்து போகுமாறு உபதேசிக்கிறது. ஆனால் நியாயமாக பார்த்தால் அத்தகைய சம்பவங்கள் கேள்விபட்டவரை மிகவும் குறைவுதான். பொதுவாக ஆமிஷ் சமூகம் எழும் பிரச்சினைகளுக்கு தங்களுக்குள்ளேயே பஞ்சாயத்து பண்ணிக்கொள்ள விரும்பினாலும்,  நிலைமை மீறி போனால் மனைவி காவல் துறையினரிடம் புகார் கொடுக்கலாம். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வாழும், எல்லா சட்டதிட்டங்களுக்கும் உட்பட்ட சாதாரண குடிமக்கள்தான் என்பதால், காவல்துறை தலையிட்டு பாதுகாப்பு கொடுக்கும்.



மற்றபடி ஆமிஷ் குடும்பங்கள் ஒருவருக்கொருவர் உதவிகொள்வதென்பது மிகவும் பிரசித்தமான விஷயம். உதாரணமாக ஒரு குடும்பத்தின் வீடோ, தானிய களஞ்சியமோ தீக்கிரையாகி சாம்பல் ஆனதென்றால், மற்ற ஆமிஷ் குடும்பங்கள் உடனே வந்து அடுத்த ஒரு வாரத்திற்குள் புதிய வீடோ தானியக்களஞ்சியமோ கட்டி தந்து விடுகிறார்கள். பெரிய இயந்திரங்கள் எதையும் உபயோகிக்காமல் வெறும் மனிதமுயற்சியால் வெகுவிரைவில் கட்டிடங்களை கட்டும் இவர்கள் முறை பார்பதற்கு வியப்பான ஒன்று.



ஆமிஷ் சமூகமும் அஹிம்ஸாவாதமும்
வன்முறையை தவிற்பதென்பது ஆமிஷ் வாழ்முறை கொள்கைகளின் ஆணிவேர். எனவே இவர்கள் ராணுவத்தில் எப்பொழுதும் பணி புரிவதில்லை. அரசியலில் ஈடுபடுவதோ,  தேர்தல்களில் ஓட்டு போடுவதோ கூட கிடையாது. இங்கே மளிகை கடைகளில் கூட துப்பாக்கிகள் விற்பதும், சாதாரணமாக மக்கள் விதம்விதமான துப்பாக்கிகளை வாங்கி வைத்துக்கொள்வதும் சகஜம். பத்து வயது கூட ஆகாத குழந்தைகளுக்கு நிஜ துப்பாக்கியை பிறந்தநாள் பரிசாக கொடுக்கும் பழக்கமும் சில அமெரிக்கர்களிடையே உண்டு. இந்த துப்பாக்கி கலாசாரத்தின் பின்விளைவாக உலகிலேயே வேறு எந்த வளர்ந்த செழிப்பான நாடுகளுக்கும் பொருந்தாத சில வருந்தத்தக்க புள்ளிவிவரங்கள் அமெரிக்காவிற்க்கு பொருந்தும். இந்த நாட்டில் மட்டும் வருடதிற்கு 30,000 மரணங்கள் துப்பாக்கிகளால் நேருக்கின்றன. இவற்றில் 19,000க்கு மேற்பட்டவை தற்கொலைகள். மீதமுள்ள 11,000 பூராவும் கொலைகள். இந்த நிலையில் நாடு இருந்தாலும், அமெரிக்க சமூகம் பொதுவாக துப்பாக்கிகளை சுலபமாக வாங்கும், வைத்துக்கொள்ளும் உரிமைகளை விட்டு கொடுக்க தயாராக இல்லை. இத்தகைய ஒரு சமூகத்தில் வாழும் ஆமிஷ் மக்களோ தங்கள் வாழ்வில் வன்முறைக்கு சிறிதும் இடம் தரவிரும்பாதவர்கள்.



இந்த வாழ்முறையை 2006ல் நடந்த ஒரு சம்பவம் அழகாக படம் பிடித்து காட்டி இருக்கிறது. சார்லஸ் கார்ல் ராபர்ட் என்பவன் மனநிலை சரியில்லாத ஒரு இளைஞன். வயது 32. தொழில் லாரி ஓட்டுவது. பென்சில்வேனியாவில் அவன் தனது மனைவியுடன் பார்ட் என்கிற சிற்றூரில் பல வருடங்களாக வாழ்ந்து வந்தான். அருகே நிக்கல் மைன்ஸ் (Nickel Mines) என்கிற ஒரு ஆமிஷ் குடியிருப்பு. அந்த வருடம் காந்தி ஜெயந்தியன்று (அக்டோபர் 2ஆம் தேதி) ஏதோ ஒரு பைத்தியம் பிடித்த நிலையில் ஸிப்ரிங்க்ஃபீல்ட் XD என்ற 9 மில்லிமீட்டர் கைதுப்பாக்கி ஒன்றை எடுத்துக்கொண்டு அந்த ஆமிஷ் குடியிருப்பில் இருந்த ஓர் அறை பள்ளிக்குள் (படத்தில் மாதிரிக்காக ஒரு அருங்காட்சியகத்தில் கட்டி வைக்கபட்டிருப்பது போன்ற ஒரு பள்ளி) நுழைந்தான். அறையிலிருந்த மாணவர்களையும் ஓரிரு ஆசிரியைகளையும் வெளியேறச்சொன்னான். அதன்பின் எஞ்சியிருந்த ஆறு முதல் பதிமூன்று வயதுக்குட்பட்ட பத்து சிறுமிகளை கரும்பலகையை பார்த்து நிற்க வைத்து பின்னாலிருந்து தன் கைதுப்பாக்கியால் அவர்கள் அனைவரையும் சுட்டுவிட்டு தன்னையும் சுட்டு கொண்டு இறந்து விழுந்தான். அவன் சுட்ட பத்து மாணவியரில் ஐந்து பேர் இறந்து போனார்கள். உயிர் பிழைத்த மற்ற மாணவியர் இறந்து போன இரண்டு மாணவிகள் எப்படி அந்த கொலைக்காரனிடம் தங்களை கொன்று விட்டு மற்றவர்களை விட்டுவிடுமாறு மன்றாடினார்கள் என்று விளக்கி வாக்குமூலம் கொடுதிருக்கிறார்கள். ஆனால் அதல்ல பெரிய விஷயம்.

இந்த குரூரமான சம்பவம் நடந்த அன்று மாலை தங்கள் மகள்களை இழந்த பல ஆமிஷ் பெற்றோர்கள் சார்லஸின் மனைவியையும் பெற்றோரையும் சந்தித்து நாங்கள் அனைவரும் சார்லெஸ்சை மன்னித்து விட்டோம் எனவே நீங்கள் வருத்தப்பட வேண்டாம் என ஆறுதல் கூறி தேற்றி இருக்கிறார்கள்! இறந்து போன ஒரு சிறுமியின் தாத்தா ஆமிஷ் சமூகத்திலிருந்து யாரும் கொலையாளியையோ அல்லது கொலையாளி குடும்பத்தை பற்றியோ அவதூறாக எதுவும் பேசக்கூடாது என்றும் அவர்களை மன்னிப்பதே தங்கள் கடமை, அதற்கு மேல் ஆக வேண்டியதை கடவுள் பார்த்துக்கொள்வார் என்றும்  கொலைகள் நடந்த அன்றே கூறினார். பொதுவாக, இத்தகைய சந்தர்பங்களில் மனநிலை சரியில்லாத ஒருவருக்கு எளிதில் கிடைக்கும்படி அந்தக்குடும்பம் துப்பாக்கியை அஜாக்கிரதையாக ஏன் வைத்திருந்தது என்பது போன்ற நியாயமான கேள்விகள் எழும். விவாதங்களை அந்த திசையில் திரும்பவிடாமல், தாக்கப்பட்ட ஆமிஷ் சமூகம், கொலையாளியின் மனைவியும் பெற்றோரும் சட்டத்தினாலும் தங்கள் குற்ற உணர்வினாலும் மிகவும் கஷ்டப்பட போகிறார்கள் என்பதை உணர்ந்து, அந்த கொலையாளி குடும்பத்திற்காக ஒரு தொண்டு நிதியை கூட அமைத்து கொடுத்திருக்கிறது! ஆமிஷ் மக்கள் ஆயுள் காப்பீடு, மருத்துவ காப்பீடு போன்றவைகளை நம்புவதில்லை. அவர்கள் யாரிடமும் எதற்கும் நன்கொடையும் கேட்பதில்லை. இதையறிந்த பலர் இந்த நிகழ்வால் பாதிக்கப்பட்ட ஆமிஷ் குடும்பங்களுக்கென பல தொண்டு நிதிகளை ஏற்படுத்தி அந்த சமூகத்தை வற்புறுத்தி மருத்துவ உதவிகள் செய்தனர். ஏழு வருடங்களுக்கு பின் இன்றும் சார்லசின் குடும்பத்தினர் அதே ஊரில் அதே ஆமிஷ் குடும்பங்களுடன் தொடர்பு வைத்துக்கொண்டு சுமுகமாக நன்றி உணர்வுடன் வாழ்ந்து வருகின்றனர்.

கொலைகள் நடந்த அன்று தன்மகன் இப்படி ஒரு காரியத்தை செய்து விட்டானே என்று நினைத்து தாங்க முடியாமல் தேம்பித்தேம்பி அழுத சார்லசின் வயதான அப்பாவை ஒரு ஆமிஷ் முதியவர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தன் தோளில் அணைத்து ஆறுதல் சொன்ன கதையை கேட்டால், தன்  பிறந்த நாளில் நிகழ்ந்த இந்த குரூரம் ஓரளவு கழுவப்பட்டதாக காந்தியடிகள் நிச்சயம்  பெருமைப்பட்டிருப்பார்.

(முற்றும்)

No comments:

Post a Comment