Friday, January 3, 2014

அமைதியான, அஹிம்சை நிறைந்த ஆமிஷ் வாழ்க்கை - பாகம் 1

I published this article first on the Solvanam.com site. This is part 1. Part II will be published in two weeks.

அமெரிக்கா என்றால் பொதுவாக எல்லோருக்கும் நினைவுக்கு வருவது நியூயார்க்கும் லாஸ் ஏஞ்செலேசும்தான். அது போன்ற நகரங்களில் இருக்கும் அடுக்கு மாடி கட்டிடங்களும், மிகவும் விலை உயர்ந்த கார்களும், மால்களும் விமானங்களும் உலக பிரசித்தமானவை. அந்த இரு கரைகளுக்கு நடுவே பிரசித்தமில்லாத ஆனால் சுவாரஸ்யமான பல விஷயங்கள் அமெரிக்காவில் உண்டு. அவற்றில் ஒன்று இந்தகட்டுரையில் நாம் சந்திக்கும் ஆமிஷ் குடியிருப்புகளும் அதில் வாழும் மக்களும்.
அமெரிக்காவிற்குள் பென்ஸில்வேனியா, ஒஹையோ மற்றும் இண்டியானா ஆகிய மூன்று மாகாணங்களில் ஆமிஷ் குடியேற்றங்களை பார்க்க முடிகிறது. இதிலும் குறிப்பாக பென்ஸில்வேனியா மாநிலத்தில் இருக்கும் லங்காஸ்டர் என்கிற கௌண்ட்டியில் (மாவட்டம்) ஆயிரக்கணக்கான ஆமிஷ் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வாழும் பெரும்பான்மையின வெள்ளையர் இனத்தை சேர்தவர்கள்தான் என்றாலும், தங்கள் மதவிதிமுறைகள், கோட்பாடுகளுக்கு உடன்பட்டு எந்த வித நவீன உபகரணங்களயும், மின்சாரம் உட்பட, உபயோகிக்காமல் ஒரு எளிமையான வாழ்முறையை கடை பிடித்து வாழ்ந்து வருகின்றனர்..!
Amish2

ஆரம்பம்

கி.பி.1690ளில் ஐரோப்பாவில், குறிப்பாக ஸ்விட்ஸர்லாந்தில் வாழ்ந்து வந்த கிறிஸ்துவர்களில் ஒரு பிரிவினர் மற்ற கிறிஸ்துவர்கள் மதத்தை அவ்வளவு சரியாக கடைபிடிப்பதிலை என நினைத்து தனி கட்சி ஆரம்பித்தனர். ஜேகோப் அம்மான் என்பவர் தலைமையில் இப்படி உருவான இந்த கிறிஸ்துவ பிளவு, பிற்காலத்தில் ஆமிஷ் என்ற பெயரை பெற்றது. ஆமிஷ் என்ற சொல் ஜேக்கபின் அம்மான் என்ற குடும்ப பெயரில் இருந்து உருவாகி இருக்கிற திரிபு என்பது ஒரு பொதுக்கருத்து.
பதினைந்து, பதினோராம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் மிகவும் வலுவாக கோலோச்சிய கத்தோலிக்க பிரிவின் வழிமுறைகளின்படி ஒருகுழந்தை பிறந்து சில மாதங்களுக்குள் அதற்கு ஞானஸ்நானம் செய்வித்து அதை ஒரு கத்தோலிக்க பிரஜையாக ஆக்க வேண்டும். இன்றும் இந்த சடங்கு முடிந்த பின்தான் கத்தோலிக்க தேவாலயம் நடத்தும் பிரார்த்தனைகளில் எவரும் முழுமையாக கலந்துகொள்ள முடியும். ஞானஸ்நானம் செய்துகொள்ளாத ஒருவர் இறக்கும் போது அவர் சொர்க்கத்திற்குள் அனுமதிக்க படமாட்டார் என்பது கத்தோலிக்க நம்பிக்கை.
ஆமிஷ் மற்றும் வேறு சில உப பிரிவினர் குழந்தைக்கு ஞானஸ்நானம் செய்வித்து தேவாலயத்தின் உறுப்பினராக அதை சேர்ப்பது, வலுக்கட்டாயமாக அதன்மேல் ஒரு மதத்தேர்வை அதன் அனுமதி இல்லாமல் திணிப்பதாக கருதினர் .எனவே அவர்கள் வழிமுறைப்படி ஞானஸ்நானம் ஒருவர் நன்கு வளர்ந்து, தன்னிச்சையாக அந்த மதத்தை பின்பற்ற விரும்பி உறுதி மொழி எடுத்துக்கொள்ள தயாராகும் போதுதான் கொடுக்கப்படுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் அனபேப்டிசம் (Anabaptism) என்று பெயர். நான்கைந்து நூற்றாண்டுகளுக்கு முன் இந்த “வயது வந்தோருக்கு ஞானஸ்நானம்” என்கிற பழக்கம் அறிமுகபடுத்தபட்டபோது, மரபார்ந்த கிருஸ்தவ மதப்பிரிவுகள் இதை வன்மையாக எதிர்த்தன. இந்த முறையை கைப்பிடித்த ஆமிஷ் பிரிவினர் தேடிக் கண்டு பிடிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டனர். அதனால் ஆமிஷ் மக்கள் ஐரோப்பாவிலிருந்து தப்பித்து மதச்சுதந்திரம் தேடி வட அமெரிக்கா வந்து குடி புகுந்தனர்.
நூறு வருடங்களுக்கு முன் பத்தாயிரத்திற்கும் குறைவாக இருந்த இந்த பிரிவினர் தற்போது மக்கள் தொகையில் இரணடு லட்சத்து எண்பதாயிரத்தை தாண்டி இருக்கிறார்கள். சென்னை நகரின் மக்கள் தொகை மட்டுமே ஏறக்குறைய ஒரு கோடி என்பதை நினைத்து பார்க்கும் போது, மூன்று லட்சம் பேர் கூட இல்லாத ஒரு பிரிவு மிகவும் சிறியதுதான். இருந்தாலும் டிவிட்டரும்,பேஸ்புக்கும் நமது இன்றைய வாழ்முறையை குறித்துக்கொண்டு இருக்கும் இந்த இருபதொன்றாம் நூற்றாண்டில், காரும் கலர் டிவியும் சாதாரணமாக கிடைக்கும் அமெரிக்காவில், அதை நாள்தோறும் உபயோகிக்கும் சமுதாயத்திற்கிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் போதிலும், தன்னிச்சையாக மின்சாரத்தையோ காரையோ உபயோகிக்காமல் வாழும் ஆமிஷ் மக்கள் வாழ்வுமுறை சிதறிப்போகாமல் இன்றும் வளர்ந்துகொண்டிருப்பது ஆச்சரியப்படவேண்டிய விஷயம்தான். இப்படி ஊரோடு ஒட்டாமல் வாழ விரும்பும் இவர்கள் வாழ்முறை வருடதிற்கு இரண்டு கோடி சுற்றுலா பயணிகளை வேறு இவர்கள் வாழும் மாவட்டங்களுக்கு கவர்ந்து இழுக்கிறது!

ஆமிஷ் தேவாலயம்

இவர்கள் தங்களுடைய தேவாலயம் என்று தனியாக பெரிய கட்டிடங்கள் எதுவும் கட்டிக்கொள்வதில்லை. அதற்கு காரணம் தனித்து நின்று பெரிதாய் கவனம் ஈர்க்கும் எதுவுமே தேவையற்ற ஆடம்பரம் என்பதுதான். அந்தக்காலத்தில் மற்றவர்களால் தேடி துரத்தி துன்புறுத்தப்பட்டவர்கள் என்பதால், தாக்க வருபவர்களுக்கு பெரிய கட்டிடங்கள் இலகுவான இலக்காக அமைந்துவிடும் என்ற சிந்தனையும் உண்டு. பொதுவாக ஒரு இருபத்தைந்து முப்பது ஆமிஷ் குடும்பஙகள் சேர்ந்து ஒரு சிறு சமூகமாக வாழ்கிறார்கள். அவர்களுக்குள் யாராவது ஒரு சில ஆண் பெரியவர்கள் குடவோலை முறைப்படி தேர்ந்து எடுக்கப்பட்டு அந்த குழுவின் தேவாலயத் தலைவர்களாக (பாதிரியார் போல) இருந்து, இறக்கும் வரை அந்த சமூகத்தை வழி நடத்துகின்றனர். இரு வாரங்களுக்கு ஒரு முறை ஞாயிறு அன்று நடைபெறும் பிரார்த்தனைகள் ஒவ்வொரு வாரமும் அந்த சிறு சமூகத்தைச்சேர்ந்த ஏதாவதொரு குடும்பத்தின் வீட்டில் நடைபெறுகிறது. பிரார்த்தனைக்குப்பின் அத்தனை குடும்பங்களின் உறுப்பினரும் சேர்ந்தமர்ந்து மதிய உணவு உண்பது வழக்கம். உலகில் உள்ள அத்தனை ஆமிஷ் மக்களுக்கும் சேர்த்து போப்பாண்டவர் போன்ற பொது மதத்தலைவர் யாரும் கிடையாது. ஒவ்வொரு சிறு சமூகத்திலும் உள்ள மூத்த தலைவர்கள் தங்கள் உறுப்பினர் குடும்பங்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை ஆர்டுனங் (Ordnung) என்னும் ஒரு தொகுப்பாக வைத்துக்கொள்கிறார்கள். பொதுவாக அந்த சமூகத்தில் வாழும் அனைவருக்கும் இந்த விதி வழிமுறைகள் தெரியும் என்பதால் இவற்றை ஒரு புத்தகமாக எழுதி வைத்துகொள்ள கூட அவர்களுக்கு அவசியமிருப்பதிலை! இதனால் பத்து மைல் தள்ளி வாழும் இரு ஆமீஷ் சமூகத்தின் வழிமுறைகள் சற்று வேறு படுவது சகஜம்.
இவர்கள் வேறு மதத்தை சேர்ந்தவர்களையோ அல்லது பிற கிறிஸ்தவ பிரிவினரையோ தங்கள் பிரிவுக்கு மாற்ற முயற்சிக்கும் பழக்கம் அறவே கிடையாது. அபூர்வமாக சிலர் ஆமிஷாக மாறுவதுண்டு. மாறவிரும்புபவர்கள் முதலில் தேவாலயத்தில் முறையிட்டு அனுமதி பெற்று, பிறகு சில வருடங்கள் ஒரு ஆமிஷ் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்து அத்தனை ஆர்டுனங் விதிகளையும் பின்பற்றி எல்லாவித நவீன சௌகரியங்களையும் துறந்து வாழ்ந்து காட்டி, அந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டு ஞானஸ்நானம் பெற வேண்டும். இது வெளியிலிருந்து உள்ளே நுழைய முயற்சிப்பவர்களுக்கு மிகவும் கடினமான பரிட்சை என்பதால் இது மிக மிக அபூர்வம்.
Amish1

உடைகள்

இவர்கள் எந்த மாதிரி உடைகள் அணியலாம் அல்லது அணியக்கூடாது என்பது ஆர்டுனங் வரைமுறைகளில் உண்டு. பொதுவாக ஆண்கள் கருப்பு நிறத்திலும் பெண்கள் நீலம் மற்றும் வெள்ளை நிறத்திலும் எளிமையான உடலை நன்கு மூடுகிற உடைகளை அணிகிறார்கள். உடைகள் தைக்க உபயோகிக்கும் துணி ஒரே நிறத்தில் சாயம் தோய்த்ததாக இருக்க வேண்டும். கோடுகளோ, பூக்களோ அசசடித்த துணிகள் அனுமதிக்கப்படுவதில்லை. பிரகாசமான வண்ணங்களும் வடிவங்களும் உடைகளில் இருந்தால் அது அந்த தனி நபர் பற்றிய கவன ஈர்ப்புக்கு காரணமாக அமைகிறது. ஆமிஷ் வழிமுறையே மேற்கத்திய கலாசாரதிற்க்கு எதிர்மறையாக, எந்த ஒரு தனிமனிதரையும் உயர்த்தியோ தனித்தோ காட்டக்கூடாது என்பதுதான். எனவே அணியும் துணிமணிகளில் பொத்தான்கள் வைப்பதுகூட ஒருவகையில் தற்பெருமையை ஊக்குவிப்பதாக கருதி, அதையும் தவிர்த்து, வெறும் கொக்கி, ஊசிகளை மட்டுமே உடைகளை உடலில் அணிந்து கொள்ள உபயோகிக்கிறார்கள். அரைக்கச்சு (belt) அணியும் வழக்கமும் கிடையாது. பொத்தான்களே கூடாது என்று சொன்னபின், மேல் கால்சராயிலோ கௌனிலோ ஜிப் வைத்துக்கொள்ளமா என்ற சந்தேகம் யாருக்கும் வருவதேயில்லை. ஆண்கள் வைக்கோல் தொப்பியும், பெண்கள் துணியினால் ஆன குல்லாயும் அணிகிறார்கள். திருமணமான ஆண்கள் தாடியை மழிப்பதில்லை ஆனால் மீசை கிடையாது. எனவே ஒருவரின் தாடி நீளம் அவர் எவ்வளவு வருடங்களுக்கு முன்னால் மணமானவர் என்று காட்டும் ஒரு அளவுகோல்!

கல்வி

ஆமிஷ் மக்கள் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி எட்டாம் வகுப்பு வரையிலான படிப்பு போதும் என்று கருதுகின்றனர். அதற்கு மேல் படிப்பது தங்கள் வாழ்க்கை முறைக்கு தேவையில்லை என்பதும், குழந்தைகள் பெற்றோருடன் சேரந்து இருந்து உழைப்பதிலும், உண்பதிலும் பிரார்த்திப்பதிலும் கற்றுக்கொள்வதுதான் பிற்கால வாழக்கைக்கு அதிமுக்கியமான கல்வி என்பதும் அவர்கள் எண்ணம். சில ஆமிஷ் சமூகங்கள் தங்கள் குழந்தைகளை பொதுப் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பினாலும், வேறு பல ஆமிஷ் குடியிருப்புகள் தங்களுக்கென ஒரு ஒற்றை அறை பள்ளிக்கூடத்தை அமைத்துக்கொண்டு தாங்களாகவே பாடம் சொல்லிக்கொடுப்பதும் உண்டு. ஆமிஷ் அல்லாத அனைவரையும் அவர்கள் ஆங்கிலேயர்கள் (English) என்று அழைக்கின்றனர். மற்றவர்கள் யாவரும் ஆப்பிரிக்காவிலிருந்து வந்தவர்களோ அல்லது ஆசியாவிலிருந்து வந்தவர்களோ கவலை இல்லை. ஆமிஷ் அல்லாத எவரும் ஆங்கிலேயர்கள்தான். அவர்கள் வாழ்முறை பற்றி ஆராய்ந்து கொண்டிருந்த ஒரு ஆய்வாளர் ஒரு முறை ஒரு ஆமிஷ்முதியவரிடம், “நீங்கள் என்னதான் சொன்னாலும், உங்கள் மகனை நீங்கள் எட்டாவதோடு பள்ளியில் இருந்து நிறுத்தியது எனக்கு சரியாக படவில்லை“ என்று கூறினார். அதற்கு அந்த முதியவர் இப்படி பதிலளித்தார், “இதோ இங்கே பார்க்கிறீர்களே இது என் குடும்பத்தின் நிலம். அதோ அங்கே தெரிவது என் ஆங்கிலேய அண்டை வீட்டுக்காரர் நிலம். அவர் மகன் உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறான். என் மகன் என்னுடன் எங்கள் பண்ணையில் ஒரு வருடமாக வேலை செய்து வருகிறான். பார்த்துக்கொண்டே இருங்கள். சில வருடங்களில் என்மகன் அவர்கள் நிலத்தையும் வாங்கி சேர்த்து விவசாயம் செய்யப்போகிறான்.” பத்து வருடங்களில் அவர் சொன்னது அப்படியே நடந்தது!

தினசரி வாழ்க்கை

ஆமிஷ் வாழ்முறையின் அடிப்படை வேதாந்தத்தை இப்படி பார்க்கலாம். நமக்கு வேண்டியதை கடவுள் கொடுத்து இருக்கிறார். ஆகவே நமது மூதாதையர் அந்தக் காலத்தில் வாழ்ந்து வந்த விதத்திலேயே வாழ்வது நமக்கு போதும். அது நம்மையும் நமது சமூகத்தையும் என்றைக்கும் சேர்த்து நன்கு வாழ வைக்கும். எந்தவிதமான ஆடம்பரமும் மற்றவர்களில் இருந்து நம்மை தனித்து உயர்த்திக் காட்டிக்கொள்ளும் முயற்சியும் மனித வாழ்க்கைக்கு தேவை இல்லை. மற்றவர்கள் வேறு மாதிரி வாழவிரும்பினால் அது அவர்கள் விருப்பம். நாம் அவர்களை நம் வழிக்கு மாற்ற முயற்ச்சிக்க வேண்டிய அவசிமும் இல்லை.
அந்தப் பார்வையில் இருந்து பார்க்கும்போது, நாம் மின்சாரத்தையோ கைபேசியையோ உபயோகிக்க ஆரம்பிக்கும்போது, அதை விநியோகிக்கும் அமைப்புக்குள் (Networking grid) நம்மையும் இணைத்து கட்டிக்கொள்ளுகிறோம், அதில் இணைந்து விட்டோமானால் அதிலிருந்து விடுபடுபது சுலபமில்லை என்பது நமக்கு புரிகிறது. அத்துடன் பரபரப்பான, நிம்மதியற்ற, ஒருவருக்கொருவர் போட்டி போடும் வாழ்வு முறைக்குள்ளும் நாம் இழுக்கப்படுவோம். அதனால் அந்த கட்டமைப்பிலிருந்து முற்றிலும் வெளியே வாழ்வதே நமக்கு சரியான வழிமுறை என்பது ஆமிஷ் நம்பிக்கை. இத்தகைய நோக்கினால் அவர்கள் கார், பஸ் எவற்றையும் வாங்கி உபயோகிக்காமல் தாங்களே தயாரிக்கும் குதிரை வண்டியிலேயே பயணிக்கிறார்கள். நமக்கு இது ஒரு கடுமையான வரையறையாக (Limitation) தோன்றலாம். அவர்களுக்கு அதே வரையறை தங்களை தங்கள் குடும்பத்துடன் பிணைத்துவைக்கும் ஒரு ஆன்மீகக் கயிறாக தெரிகிறது. குதிரை வண்டியிலேயே பயணம் செய்தால் உங்கள குடும்பத்தை விட்டு ஒரு நாளைக்குள் 20 மைலுக்கு மேல் பிரிந்து சென்று விட மாட்டீர்கள் அல்லவா?
சாதாரணமான அமெரிக்க உச்சரிப்புடன் நம்முடன் ஆங்கிலத்தில் உறையாடும் ஆமிஷ் மக்கள் (குறிப்பாக பென்ஸில்வேனியா மாநிலத்தில் வாழ்பவர்கள்) தங்களுக்குள் பேசிக்கொள்ளும் பொழுது பென்ஸில்வேனியா டச் என்று சொல்லப்படுகிற ஒரு வித ஜெர்மன் மொழியில் உரையாடுகிறார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் இறை வழிபாடும் இந்த பாஷையில் நடப்பதுண்டு.
ஒவ்வொரு ஆமிஷ் சிறு சமூகத்தையும் வழி நடத்தும் பெரியவர்களை பொருத்து வரையறைகள் சற்று வேறுபடும் என்று பார்த்தோம். பெரும்பாலான ஆமிஷ் சமூகங்களில் கடந்த பத்து இருபது வருடங்களில் ஏற்பட்டிருக்கும் ஒரு மாறுதல் மின்சாரத்தை பயன்படுத்தாதவரை வீடுகளில் இயந்திரங்களை உபயோகிக்கலாம் என்கிற புதிய விதி முறை தளர்வு. இதனால் ஆமிஷ் வீடுகளில் பெட்ரோலில் ஓடும் துணி துவைக்கும் இயந்திரம், குளிர்பதனப்பெட்டி முதலியவைகள் தலைக்காட்டி விட்டன!! ஆனாலும் பெட்ரோலில் ஓடும் மின்ஆக்கிக்கு (Electrical Generator) நிச்சயமாக இடமில்லை. அதேபோல் அவர்களாக கார் வாங்கி ஓட்டுவதில்லை, பஸ் ரயில் முதலியவற்றில் பயணிப்பதில்லை எனினும், ஒரு அவசரத்திற்கு யாருடைய காரிலாவது ஒரு பயணியாக பயணிப்பதில் அவர்களுக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை. தாங்கள் கைபேசி வாங்கி வைத்துக்கொள்ளுவதில்லை (சாதாரண தொலைபேசி வைத்துக்கொள்ள வீட்டில் மின்சார இணைப்பு இருக்கவேண்டிய அவசியமில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது) என்றாலும், மருத்துவ/ பாதுகாப்பு அவசரங்களுக்காக ஊருக்கு வெளியே ஒரே ஒரு பொதுத் தொலைபேசி வைத்துக்கொள்ள சில ஆமிஷ் சமூகங்கள் ஆரம்பித்து இருக்கின்றன. அதெப்படி இதெல்லாம் அவர்கள் வரைமுறைகளின் மீறல் இல்லையா என்று கேட்கத்தோன்றும் போது, அந்த வாழ் முறையின் அடிப்படை கொள்கையை மீண்டும் ஒரு முறை நினைவு படுத்திக்கொள்ளலாம். மற்றவர்கள் வாழும் ஆங்கிலேய வாழ்க்கை முறை நம்மை கடவுள், குடும்பத்திலிருந்து பிரிப்பது.அது நமக்குவேணடாம். மற்றபடி அது தவறு என்று சொல்ல நமக்கு எந்த வித உரிமையும் இல்லை.
(தொடரும்)

No comments:

Post a Comment