Wednesday, May 21, 2014

தொடர்பாடல் செயலிகளின் பரிணாம வளர்ச்சி – 2

First Published at Solvanam.com on April 23, 2014

Etherplug

சின்னஞ்சிறு பொட்டலங்கள்

கணிணிகள் ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும் பொழுது தகவல் பரிவர்தனை சின்னச்சின்ன தகவல் பொட்டலங்களை (Packets) பரிமாறிக்கொள்வதன் மூலமே நிகழ்கிறது. இப்படி பரிமாறிக்கொள்ளப்படும் ஒவ்வொரு பொட்டலத்திலும் இருக்கும் தகவல் மிகவும் குறைவானதுதான். ஒரு பொட்டலத்தில் சாதாரணமாக ஒரு ஆயிரம் எழுத்துகள்தான் இருக்கும். 64 எழுத்துகள் மட்டுமே கொள்ளும் மிகச்சிறிய பொட்டலங்களில் இருந்து 64,000 எழுத்துகள் வரை கொள்ளும் ஜம்போ பொட்டலங்கள் வரை இணையத்தில் உலவுவது உண்டு என்றாலும், முக்கால்வாசி பொட்டலங்கள் ஆயிரம், ஆயிரத்து ஐநூறு எழுத்துகள் கொள்ளும் சைஸில்தான் இருக்கின்றன.
நீங்கள் உங்கள் வீட்டு கணிணியிலிருந்து ஒரு உலாவியை (Browser) உசுப்பி சொல்வனம் இணையதளத்திற்கு (Website) வருகிறீர்கள். சொல்வனம் முகப்பிலிருந்து உங்கள் கணிணிக்கு எழுத்துகளும் படங்களும் நிறைந்த ஒரு பக்கம் வந்து சேருகிறது. இல்லையா? அந்த எழுத்துக்களும் படங்களும் முதலில் சொல்வனம் இணையதளத்தின் கணிணியால் பலநூறு பகுதிகளாக பிரிக்கப்பட்டு சுமார் ஆயிரம் எழுதுக்கள் கொண்ட ஒவ்வொரு பகுதியும் ஒரு பொட்டலமாக ஆக்கப்படுகிறது. ஒவ்வொரு பொட்டலத்தின் தலையிலும் உங்கள் வீட்டு கணிணியின் விலாசம் அச்சிடப்பட்டு போஸ்ட் செய்யப்படுகிறது. ஒவ்வொரு பொட்டலத்துக்கும் ஒரு வரிசை எண்ணும் அளிக்கப்பட்டு அதுவும் அதன் தலையில் எழுதப்பட்டு இருக்கும்.
ipv4_packet_header
அந்தக்காலத்து ஈஸ்ட்மேன் கலர் தமிழ்படம் போல் பிரகாசமான வண்ணங்களுடன் காட்சியளிக்கும் இந்தப்படம் இத்தகைய பொட்டலங்களின் தலைப்பகுதியில் (Header) உள்ள விலாசஅமைப்பை காட்டுகிறது. இந்த தலைப்பகுதியில் இருக்கும் விவரங்களை வைத்துத்தான் அது சென்று சேர வேண்டிய இடம் மற்றும் செல்ல வேண்டிய பாதை (routes) ஆகியவற்றை திசைவிகள் (routers) தீர்மானிக்கின்றன. இதில் காணப்படும் நீல, பச்சை பட்டைகள் முறையே அனுப்புநர், பெறுநர் முகவரிகளை எழுதவேண்டிய இடங்களை காட்டுகின்றன. நீங்கள் சொல்வனம் இணையதளத்தை மேயும்போது, உங்கள் கணிணிக்கு வந்து சேரும் பொட்டலங்களில் அனுப்புநர் முகவரி சொல்வனம் கணிணியுடையதாகவும், பெறுநர் முகவரி உங்கள் வீட்டு கணிணி முகவரியாகவும் இருக்கும்.
இரும மொழியில் ஒரு பிட் (Bit) என்பது பூஜ்யம் அல்லது ஒன்று என்கிற இரண்டில் ஒரு நிலையை குறிக்கும் ஒற்றை எழுத்து. இதுபோன்ற எட்டு பிட்டுக்கள் சேர்ந்தால் ஒரு பைட் (Byte), இரும மொழியில் ஒரு சொல். படத்தில் காட்டப்பட்டிருப்பது IPv4 என்று சொல்லப்படும் இணையநெறிமுறை நான்காம் பதிப்பின்படி எழுதப்படும் பொட்டலத்தின் தலைப்பகுதியின் அமைப்பு. முகவரி எழுதுவதற்காக முப்பத்தி இரண்டு பிட்(அல்லது நான்கு பைட்) ஒதுக்கப்பட்டு இருப்பதால் அந்த இடத்தை உபயோகித்து நானூறு கோடி வெவ்வேறு முகவரிகளுக்கு மேல் எழுத முடியும். எனினும், இணையம் வளருகிற வேகத்திற்கு இதெல்லாம் போதாது என்று பத்து வருடங்களுக்கு முன்பாகவே இணையநெறிமுறையின் ஆறாம் பதிப்பு (IPv6) வெளி வந்து இந்த முகவரி எழுதுவதற்கான இடத்தை நான்கு மடங்கு பெரிதாக்கி இருக்கிறது. கூடுதலாக ஒவ்வொரு பிட்டை (Bit) சேர்க்கும்போதும் முகவரி எல்லை இரட்டிக்கும் என்பதால் ஆறாம் பதிப்பு முழுவதும் அமலுக்கு வந்தபின் முகவரிகள் தீர்ந்து போகும் அபாயம் நம் கொள்ளு பேரன் பேத்திகள் காலம் வரை நிச்சயம் இருக்காது.

இணையத்தில் தபால் பட்டுவாடா

நாம் தபால் நிலையத்திலிருந்து பெறும் கடிதத்தின் வெளியில் உறையில் எழுதப்பட்டிருக்கும் விவரங்களாக அந்த ஈஸ்ட்மேன் கலர் படத்தில் காட்டப்பட்டுள்ள விஷயங்களைக் கருதலாம். ஒவ்வொரு பொட்டலத்திலும் இந்த தலைப்பு பிரதேசத்தை தாண்டி உள்ளே போனால் Payload என்று சொல்லப்படும் பொட்டலத்தின் உடல் பகுதி காணப்படும். இப்பகுதியில்தான் நாம் மேலே சொன்ன ஆயிரம் எழுத்துகள் எழுதப்பட்டிருக்கும். எனவே Payload என்ற அந்த உடல் பகுதியை உறைக்குள் இருந்து நாம் உருவி எடுத்து படிக்கும் கடிதத்திற்கு சமமாக கொள்ள வேண்டும்.
இப்படி உருவாக்கப்பட்ட நூற்றுக்கணக்கான பொட்டலங்கள் இணையம் வழியாக உங்கள் வீட்டை வந்தடையும்போது, உங்கள் கணிணியில் ஓடும் உலாவி இந்த பொட்டலங்களை பிரித்து வரிசை எண்ணை உபயோகித்து வரிசைபடுத்தி, திரும்ப அந்த சொல்வனம் முகப்பு பக்கத்தை உருவாக்கி உங்கள் திரையில் காட்டுகிறது. அந்த முகப்பு பக்கத்தில் இருக்கும் ஒரு லிங்க்கை நீங்கள் தேர்ந்தெடுக்கும்போது, உங்கள் கணிணி அடுத்து எனக்கு இந்த கட்டுரை வேண்டும்” என்பது போன்ற அந்த ஆணையை புது பொட்டலங்களாக மாற்றி சொல்வனம் இணையதள கணிணிக்கு அனுப்பிவைக்கிறது. இதற்கு பதில் சொல்வதுபோல் சொல்வனம் கணிணி அந்த கட்டுரை பொட்டலங்களை அனுப்ப ஆட்டம் தொடர்கிறது.
இந்த செயல்முறையை சரியாக புரிந்துகொள்ள, கணிணிகள் சொல்வனம் இணையதளத்தின் முகப்புப்பக்கத்தை மட்டுமே ஒரு புத்தகத்தை போல கையாளுகின்றன என்று நினைவுறுத்திக் கொள்ள வேண்டும். நான் உங்களுக்கு ஒரு புத்தகத்தை தபாலில் அனுப்பவேண்டி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். நான் அந்த புத்தகத்தை பக்கம் பக்கமாக கிழித்து, ஒவ்வொரு பக்கத்தையும் ஒரு கடித உறையிலிட்டு உங்கள் விலாசத்தை உறையில் எழுதி தனித்தனியாக தபாலில் சேர்த்துவிடுகிறேன். அந்த நூற்றுக்கணக்கான உறைகளை நீங்கள் ஒவ்வொன்றாக பிரித்து உறையை தூக்கி எறிந்துவிட்டு உள்ளிருந்து கிடைத்த ஒவ்வொரு தாளையும் புத்தகத்தின் பக்க எண்களை கொண்டு வரிசைப்படுத்தி விட்டீர்களானால், புத்தகம் திரும்ப கிடைத்து விடுமல்லவா? இதே கதைதான் நொடிக்கு நொடி கணிணிகளில் நடைபெறுகிறது. புத்தகத்தை தபாலில் அனுப்பும்போது இப்படிச்செய்வது பைத்தியக்காரத்தனமாக இருக்கும். ஆனால் கணிணிகள் உலகில் இந்த முறையை கையாள்வதில் நிறைய சௌகரியங்கள் இருக்கின்றன. சேவைத்தரநிர்ணயம் (Quality of Service) அந்த சௌகரியங்களில் முக்கியமான ஒன்று. பின்னால் இதையும் விரிவாக அலசுவோம்.
சாதாரணமாக ஒரு புத்தகத்தை எடுத்து பார்த்தால் ஒரு வரிக்கு குறைந்தது நூறு எழுத்துக்களும் ஒரு பக்கத்திற்கு ஐம்பது வரிகளும் இருக்கும். ஆக சுமார் ஐயாயிரம் எழுத்துகள் கொண்ட ஒரு பக்கத்து உரையை ஒரு கணிணியிலிருந்து இன்னொன்றுக்கு அனுப்ப ஐந்து பொட்டலங்கள் என்பது ஒன்றும் மோசமில்லை. ஆனால் ஒரு மெகா பைட் (1 Mega Byte) அளவில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெட்டி அடைக்க சுமார் ஆயிரம் பொட்டலங்கள் தேவைப்படும். அதைத்தாண்டி யூடியூப் (YouTube) போய் வீடியோ பார்க்க ஆரம்பித்தீர்களானால் பொட்டலக்கணக்கு எகிறிவிடும். இப்படி ஒவ்வொரு நிமிடத்திற்கும் இணையத்தில் இணைந்து இருக்கும் ஒவ்வொரு கணிணியும் பல லட்க்ஷக்கணக்கான பொட்டல உறைகளை அனுப்பி பெற்றுக் கொண்டு இருந்தால் இத்தனை தபால்களையும் சரிவர கையாண்டு பட்டுவாடா செய்ய வேண்டிய தபாலாபிசின் கதி என்ன? அங்கேதான் தொடர்பாடல் செயலிகளும் அவற்றை மூளையாக கொண்டிருக்கும் திசைவி சாதனங்களும் புகுந்து விளையாடிக்கொண்டு இருக்கின்றன.
இணையத்தின் பல இடங்களில் உட்கார்ந்துகொண்டு பணி புரியும் திசைவிகளின் (Routers) கடமை இப்படி வரும் பொட்டலங்கள் ஒவ்வொன்றிலும் அச்சடிக்கப்பட்டு இருக்கும் விலாசத்தை படித்து பார்த்து நீ கோயம்புத்தூர் வழியாகப்போ, நீ கரூர் வழியாகப்போ என்று சரியான வழியில் அவற்றை அனுப்பி வைப்பதுதான். அவை பணிபுரியும் விதத்தையும், இத்துறையின் வளர்ச்சியையும் தபால் நிலைய உதாரணத்தை வைத்து விளக்கிக்கொண்டே போகலாம்.
ஐம்பது வருடங்களுக்கு முன் தபால் நிலையத்துக்கு வரும் கடிதங்களை மனிதர்கள் விலாசம் படித்து அவை சென்று சேர வேண்டிய ஊரையோ தெருவையோ பொறுத்து பிரித்து வரிசைப்படுத்தி பெட்டிகளில் போட்டு வண்டிகளில் ஏற்றி அனுப்பியமுறை நமக்கெல்லாம் தெரியும். இப்பணியை செய்துவந்த அலுவலரை பொதுநோக்கு செயலிக்கு இணையாக பார்க்கலாம். இந்த பிரித்தல் வேலை மட்டுமின்றி வேறெந்த வேலையும் அவரால் செய்ய முடியும். கணக்கெழுத வேண்டுமா, கொஞ்சம் கல்லாவில் நின்று ஸ்டாம்ப் விற்க வேண்டுமா, தமிழுக்கு பதில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட அல்லது கிறுக்கல் கையெழுத்தில் எழுதப்பட்ட விலாசத்தை வாசித்து வரிசைப்படுத்தவேண்டுமா? எது வேண்டுமானாலும் அவரால் சுலபமாக கற்றுக்கொண்டு செய்ய முடியும், ஒரு பொதுநோக்கு செயலியைப்போல. வளைந்து கொடுத்து வேலை செய்யக்கூடிய இந்த திறமைக்கு நாம் தரும் விலை வேகம். அவரால் ஒரு மணிக்கு அதிகபட்சம் முன்னூறு கடித உரைகளைப்படித்து வரிசைப்படுத்த முடியலாம். இரண்டு மணி நேரம் தொடர்ந்து வேலை செய்தால் காஃபி குடிக்கவோ சாப்பிடவோ இடைவேளை கேட்பார். சிறு நகரங்களிலோ கிராமங்களிலோ இருக்கும் குட்டி தபால் நிலையங்களுக்கு இந்த திறன் போதும். ஆனால் பெரிய நகரங்களில் லட்க்ஷக்கணக்கில் தபால்கள் கையாளப்படும் நிலையங்களுக்கு இந்த முறை சரிப்பட்டு வராது. இல்லையா? எனவே 80களிலேயே தானியங்கு வரிசைப்படுத்தும் இயந்திரங்கள் தபால் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டன.
MailSorter
வலையில் தேடிப்பார்த்தபோது , நியூசிலாந்தில் 1988ல் உபயோகத்திற்கு வந்த இந்த இயந்திரத்தின் படம் கிடைத்தது[2]. ஒரு .அறையை அடைத்துக்கொண்ட இந்த இயந்திரம் மணிக்கு இருபதாயிரம் தபால்களை விலாசம் படித்து எந்த ஊருக்கு போக வேண்டும் என்று பிரித்து கொடுத்தது. இன்னொரு இருபது வருடங்கள் கழிந்தபின் அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த படத்தில் காணப்படும் நீலப்பிசாசு ஒரு நிமிடத்திற்குள்ளேயே முப்பத்தி இரண்டாயிரம் கடிதங்களை வரிசைப்படுத்துமாம்.
BlueDevil
இந்த திறன்பாட்டு முன்னேற்றம் பிரமிபூட்டுவதுதான். ஆனால் என்ன, அதற்கு தெரிந்த அந்த ஒரு வேலையை தவிர வேறெதற்கும் இந்த இயந்திரம் உபயோகப்படாது. அந்த பணியாளரைப்போல் கொஞ்ச நேரம் கல்லாவை பார்த்துக்கொள்ளவோ, கணக்கெழுதவோ இதைச்சொல்ல முடியாது. இணைய போக்குவரத்தும் அதிரடியாக அதிகரித்துக்கொண்டே போனபோது இதே போன்ற மாற்றம்/முன்னேற்றம் அங்கும் தேவைப்பட்டது.

உபயோகத்திற்கேற்ற ஒருங்கிணைப்பு சில்லுகள்

தேவைகள் அதிகரித்தபோது முதலில் பொதுநோக்கு செயலிகளை வேகமாக ஓட வைத்தும் அதற்கு புதிய சில வித்தைகள் கற்றுகொடுத்தும் பார்த்தார்கள். இது தபால் நிலையத்தில் தபால் பிரிக்கும் பணியாளருக்கு வயதாகி விட்டதென்று ஓய்வு கொடுத்துவிட்டு புதிதாக ஒரு இளைஞரை அந்த இடத்தில் வேலைக்கு அமர்த்துவதற்கு சமம். புதிய இளைய பணியாளருக்கு இயக்குதிறனை அதிகரிக்கும் சில நூதன வித்தைகள் கற்றுக்கொடுத்தாலும் அவரால் நிமிடத்திற்கு முப்பதாயிரம் கடிதங்களை பிரிக்க என்றும் முடியாதல்லவா? எனவே மேலே பார்த்த தபால் பிரிக்கும் தானியங்கு இயந்திரங்கள் போல ஒரு குறிப்பிட்ட பணியை வெகு வேகமாக செய்யக்கூடிய சில்லுகள் தலையெடுக்க ஆரம்பித்தன. ஏஸிக் (ஆங்கிலத்தில் ASIC: Application Specific Integrated Circuit) என்று சொல்லப்படும் இந்த சில்லுகள் இன்றும் பல பணிகளுக்காக உருவகிக்கப்பட்டு கோடிக்கணக்கில் தயாரித்து விற்கப்படுகின்றன. திசைவிகள் தயாரிப்புக்காக உருவாக்கப்பட்ட ஏஸிக் சில்லுகள் வன்பொருட்கள் மட்டத்திலேயே, தன்னிடம் வரும் ஒவ்வொரு பொட்டலத்தையும் பிடித்து, முதல் பதினாறு வார்தைகளை தள்ளிவிட்டு, பதினேழாவது வார்த்தையிலிருந்து காணப்படும் பெறுநர் முகவரியை படித்து அது போய்ச்சேர வேண்டிய ஊரையோ கணிணியையோ நோக்கிச்செல்லும் கம்பியில் போட்டு துரத்தி விடுகின்றன. இந்த இயந்திரங்கள் இந்த ஒரு வேலையை மட்டுமே செய்யப்பிறந்தவை என்பதால், பொறியாளர்களை வைத்து பெரிதாக மென்பொருள் நிரல்கள் ஏதும் எழுதி இவற்றுக்கு கொடுக்க வேண்டியதில்லை. அப்படிக்கொடுத்து இவைகளை பொதுநோக்கு செயலிகளைப்போல் வேறு வேலைகளை செய்யச்சொல்லும் சாத்தியமே இல்லை. ஆனால் இந்த சில்லுகளால் ஒரு நிமிடத்தில் லட்க்ஷக்கணக்கில் பொட்டலங்களை கையாள முடிந்தது.

பிணையச்செயலிகள்

இன்றும் முன் சொன்னது போல் உங்கள் வீட்டு ஃபிரிஜ், கார், கப்பல், விமானங்கள் முதலிய விஷயங்களை நிர்வகிக்க தேவைக்கு ஏற்றாற்போல் ஏஸிக் சில்லுகள் தயாரிக்கப்படுகின்றன. ஆனால் தொலைத்தொடர்பு துறையின் அதிவேக வளர்ச்சிக்கு அது மட்டும் போதவில்லை. அதற்கு ஈடு கொடுக்க அடுத்த பரிமாணமாக பிணையச்செயலிகள் (Network Processors) உருவாக்கப்பட்டன.
சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க ஜனாதிபதி மற்றும் சில முக்கியஸ்தர்களுக்கு பள்ளி குழந்தைகளிடமிருந்து வந்திருப்பது போல் தோன்றிய சில தபால் உறைகளில் அந்த்ராக்ஸ் :(Anthrax) என்ற கொடிய விஷம் தடவி இருந்தது பற்றி படித்திருப்பீர்கள். இந்த பயங்கரவாத உத்தி தெரிய வந்தவுடன், வாஷிங்டன் தபால் நிலையதிற்கு வரும் தபால்களை எல்லாம் விலாசம் பார்த்து பிரித்து அனுப்புவதுடன், அவற்றில் ஆட்ஷேபனைக்குறிய கிருமிகளோ விஷமோ இருக்கிறதா என்று ஒரு ஸ்கேன் வேறு செய்ய வேண்டி இருந்தது. திரும்பவும் தபால் நிலையதிற்கு போய், அங்கு தபால் பிரிக்கும் பணியாளருக்கு ஸ்கேன் செய்யும் முறை பற்றி பயிற்சி அளித்து, இதை ஒரு கூடுதல் பொறுப்பாக அவருக்கு கொடுக்கலாம். அவரால் அதை கற்றுக்கொண்டு செய்ய முடியும் என்றாலும், இந்த கூடுதல் பொறுப்பு அவர் ஒரு மணிக்கு முன்னூறு கடிதங்களை கையாண்டு கொண்டு இருந்ததை வெறும் முப்பதாக குறைத்து விடும்.
இதற்கும் மேலாக வாஷிங்டன் தபால் நிலையதிற்கு வரும் சில தபால்கள் பாதுகாப்புத்துறைக்கு வந்து சேரும் சங்கேத குறியீடுகளில் எழுதப்பட்ட ரகசிய கடிதங்கள் என்றால், திரும்பவும் அதே பணியாளரை பிடித்து ஒரு குறிப்பிட்ட முகவரியிலிருந்து வரும் கடிதங்களை சங்கேத குறியீடுகளில் இருந்து சாதாரண ஆங்கிலத்திற்கு மாற்றவும் பணித்தால், அவரால் ஒரு மணிக்கு மூன்று கடிதங்களை கூட கையாண்டு சமாளிக்க முடியாது.
இப்படி வரும் கடிதங்களை ஸ்கேன் செய்து, விலாசம் பிரித்து, தேவையான கடிதங்களை மறைவிலக்கம் வேறு செய்து தரவேண்டும் என்றால், மணிக்கு முன்னூறு கடிதங்களை கையாள ஒருவர் போதாது, ஒன்பது பேரை பணியமர்த்த வேண்டும் என்று நீங்கள் சுலபமாக சொல்லிவிட முடியும். ஆனால் தினந்தோறும் வரும் கடிதங்களில் எத்தனை கடிதங்களை மறையாக்கமோ (encryption) மறைவிலக்கமோ (decryption) செய்யவேண்டும், ஸ்கேன் செய்யும் போது ஏதாவது சந்தேகத்திற்கு இடமான உறைகள் இருந்ததா என்பதை எல்லாம் பொறுத்து ஒரு நாள் நூறு பணியாளர்களும் இன்னொரு நாள் நான்கே பணியாளர்களும் தேவைப்படலாம். தபால் ஆஃபிஸ் திவால் ஆகி விடாமல் லாபத்தோடு நடத்தி அதே சமயம் நல்ல சேவையும் கொடுக்க வேண்டும் என்றால், நியூசிலாந்தில் உபயோகப்படுத்தப்படும் நீலப்பிசாசு ஒன்றை வாங்கி, அதை தானியங்கு ஸ்கேனர் ஒன்றுடன் இணைத்து, மறைவிலக்கலுக்கு இன்னொரு இயந்திரம் கிடைத்தால் அதையும் வாங்கி இணைத்துவிட்டு, பணியாளருக்கு இந்த எல்லா இயந்திரங்களையும் எப்படி உபயோகிப்பது என்று மட்டும் பயிற்சி அளிப்பது நல்ல யோசனையாக தோன்றுகிறது. அல்லவா?
இதே தேவைகள் பிணைய நிர்வாகத்திலும் (Network Management) உண்டு. ஒரு நிறுவனத்தின் பிணைய இணைப்பு வழியே உள்ளே வரும் பொட்டலங்களில் வைரஸ் ஏதும் உள்ளதா என்று ஸ்கேன் செய்ய வேண்டியிருக்கிறது. ஐ‌.டி .நிறுவன பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும்போது, தங்கள் லேப்டாப்பை வீட்டிலிருந்து இணையம் வழியாக அலுவலக பிணையத்துடன் இணைத்துக்கொள்ளும் போது, வீட்டிலிருந்து கம்பெனிக்கு போகும் பொட்டலங்களும் சரி திரும்பி வரும் பொட்டலங்களும் சரி, சங்கேத குறியீடுகளால் மறையாக்கம் செய்யப்பட்டு இருக்கும். எனவே இரு பக்கத்திலும் வெளியே போகும் பொட்டலங்களை மறையாக்கமும் உள்ளே வரும் பொட்டலங்களை மறைவிலக்கமும் செய்யும் தேவைகள் உண்டு.
திசைவிகளில் பொதுநோக்கு செயலிகளை உபயோகித்தால், பொட்டலங்களை பார்த்து விலாசம் பிரிப்பது, வைரஸ் ஸ்கேன் செய்வது மறையாக்கம் மறைவிலக்கல் செய்வது எல்லாவற்றிக்கும் நிரலிகள் எழுதி ஒட்டிவிடலாம்தான். ஆனால் ஒரு நாள் பனி கொட்டி எல்லா கம்பெனி பணியாளர்களும் வீட்டில் இருந்து வேலை செய்தால், திசைவிகளில் உள்ள பொதுநோக்கு செயலிகள் லோடு தாங்காமல் படுத்து விடும். உடனே இணைய இணைப்பு மிகவும் வேகம் குறைந்து எல்லோருக்கும் கடுப்பேற்றும். இதற்கு பதில் சொல்ல ஒரே சில்லுக்குள் ஒரு பக்கம் விலாசம் பார்த்து பிரிக்கும் அமைப்பும், இன்னொரு புறம் மறை ஆக்கம்/விலக்கம் செய்யும் அமைப்பும், பிறிதொரு புறம் வைரஸ் ஸ்கேன் செய்யும் அமைப்பும் கொண்ட செயலிகள் உருவாக்கப்பட்டன. இவைதான் பிணையச்செயலிகள் (Network Processors). முன் சொன்ன உதாரணப்படி தபால் பிரிக்கும் இயந்திரம், அந்த்ராக்ஸ் ஸ்கேனர், மறையாக்கம்/விலக்கம் செய்யும் இயந்திரம் எல்லாவற்றையும் இணைத்து ஒரு பெரிய இயந்திரத்தை புதிய தானியங்கு தபால் ஆபிஸ் கட்டுவதற்கு ஏதுவாக உருவாக்குவதற்கு இணை இது.
இன்டெல் நிறுவனம் பெண்டியம் சில்லை தயாரித்து விற்க, டெல் (Dell), HP முதலிய நிறுவனங்கள் அந்த செயலியை வாங்கி, எண் சாண் உடலுக்கும் சிரசே பிரதானம் என்று சொல்வது போல், தாங்கள் தயாரிக்கும் மேஜை கணிணிகளின் மூளையாக அந்த செயலியை உபயோகித்து, லட்க்ஷக்கணக்கில் கணிணிகள் செய்து மக்களுக்கு விற்றார்கள் இல்லையா? அதே கதைதான் இங்கேயும். 1990களில் லூசெண்ட் (Lucent), அகீயர் (Agere), எல்‌எஸ்‌ஐ (LSI), ப்ராட்காம் (Broadcom) போன்ற நிறுவனங்கள் கீழே படங்களில் உள்ளது போன்ற இத்தகைய ஏஸிக் மற்றும் பிணையச்செயலி சில்லுகளை செய்து விற்க, எரிக்சன் (Ericsson), நார்ட்டெல் (Nortel) போன்ற நிறுவனங்கள் அவற்றை வாங்கி தாங்கள் தயாரிக்கும் திசைவிகளின் மூளையாக உபயோகித்து திசைவி பெட்டிகளை உருவாக்கி, அப்பெட்டிகளை இணைய இணைப்பை வழங்கும் BSNL போன்ற கம்பெனிகளுக்கு (Internet Service Providers) விற்று இணையம் உலகெங்கும் பரவ வழி வகுத்தார்கள். இத்தகைய திசைவி பெட்டிகள் தயாரிப்பதில் மிகவும் பெயர்பெற்ற நிறுவனம் சிஸ்கோ (Cisco). இந்த நிறுவனம் மற்ற நிறுவனங்கள் தயாரித்த பிணையசெயலிகளை தங்கள் திசைவிகளில் உபயோகிப்பத்தோடு, தாங்களே பிணையசெயலிகள் தயாரிக்கவும் செய்தார்கள்.
MSI_BCM_Chips_AMD_Intel_Citrix_IC_Integrated_Transistors_Broadcom
1990களில் லுசென்ட் நிறுவனத்தின் APP550 போன்ற பிணையச்செயலிகள் இணையத்தை ஆண்டு வந்த சமயத்தில் மின்னணுவியலில் தொடர்ந்து கொண்டிருந்த வேறு பல முன்னேற்றங்கள், செயலிகளின் அடுத்த பரிமாண வளர்ச்சிக்கு வழி வகுத்தன. அது பற்றி அடுத்த இதழில் பார்ப்போம்.
(தொடரும்)
oOo

No comments:

Post a Comment