First published at Solvanam.com on May 19, 2014
ஒரு சின்னக்கிளை அலுவலகம்
பிணையசெயலிகளில் ஒரு குட்டி பொதுநோக்கு செயலியையும் போனஸ்ஸாக போட்டு கொடுத்தார்கள் என்று பார்த்தோமல்லவா? தபால் நிலையப்பணியாளரைப்போல திசைவியை முடுக்கி விடவும் அவ்வப்போது சிறுசிறு வேலைகள் செய்யவும் சேர்க்கப்பட்ட அந்த பொதுநோக்கு செயலி விரைவிலேயே பல்வேறு விதமான வேலைகள் கொடுக்கப்பட்டு திணற ஆரம்பித்தது. ஒரு அலுவலக பிணைய நுழைவாயிலாக இருப்பது அப்படிப்பட்ட ஒரு திணறவைக்கும் வேலை. கீழே உள்ள படத்தில் ஒரு ஐம்பது பேர் வேலை செய்யும் கிளை அலுவலகம் ஒன்றை காட்டியிருக்கிறோம். இடது பக்கத்தில் இருக்கும் மேகம் பொது இணையத்தை குறிக்க வலதுபுறம் உள்ளது அலுவலகத்துக்குள் இருக்கும் பாதுகாப்பான பிணையம் (Protected Network) என்று கொள்ளலாம். அலுவலகத்துக்குள் நுழையும் வெளியேறும் எல்லா பொட்டலங்களும் நுழைவாயில் என்று குறிக்கப்பட்டிருக்கும் திசைவியை கடந்துதான் சென்றாக வேண்டும். இந்தப்பெட்டி அந்த அலுவலகத்துக்ககாக என்னென்ன சேவைகள் செய்கிறது என்று சுருக்கமாக பார்க்கலாம்.
1. அந்த அலுவலகத்துக்குள் இருக்கும் ஐம்பது கணிணிகளை இணையத்திலிருந்து மறைத்து ஒரே கணிணி போல ப்ராக்ஸி கொடுப்பது. இப்படிச்செய்வதால் இணையத்திலிருந்து தபால் பொட்டலங்கள் வந்து சேர ஒரு அலுவலகத்துக்கு ஒரு இணைய முகவரி இருந்தால் போதும். ஒரு வீட்டில் பலர் வசித்தாலும், வீட்டுக்கு என்று ஒரே முகவரியை உபயோகித்துக்கொண்டு வரும் கடிதங்களை பெயரை பார்த்து அவரவர் எடுத்துக்கொள்வது போல, அலுவலகத்துக்குள் இருக்கும் எல்லா கணிணிகளையும் இந்தபெட்டி அறிந்துகொண்டு வெளியுலகத்துடன் தான் மட்டும் பேசி, வந்து சேரும் பொட்டலங்களை சரியான கணிணிக்கு அனுப்பி விடுகிறது. இது ஒரு முக்கியமான வேலை. இப்படிச்செய்வதால்தான் IPv4 முகவரிகள் தீர்ந்து போய் முழிக்காமல் இன்னும் சமாளித்துக்கொண்டு இருக்கிறோம்.
2. தலைமை அலுவலகம் அல்லது வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்களின் கணிணிகளில் இருந்து வரும் மறையாக்கப்பட்ட பொட்டலங்களை மறை விலக்கம் செய்வது. எதிர் திசையில் அவர்களுக்கு இந்த அலுவலகதில் இருந்து போகும் பொட்டலங்களை மறையாக்கம் செய்வது.
3. இந்த கிளை அலுவலகத்தில் இருந்து ஆரம்பிக்கும் தொலைபேசி அழைப்புகளை அமைத்துக்கொடுப்பது. வெளியிலிருந்து உள்ளே வரும் தொலைபேசி அழைப்புகளை சரியான ஆளுக்கு இணைத்துக்கொடுப்பது.
4. உள்ளே வரும் பொட்டலங்களில் வைரஸ் ஏதும் உள்ளதா என்று சோதிப்பது. பணியாளர்களுக்கு வந்து சேரும் ஸ்பாம் மின்னஞ்சல்களை அடையாளம் கண்டுபிடித்து தடுப்பது.
5. நேரத்திற்கு ஏற்றாற்போல் சில பல இணையத்தளங்களை அணுகவிடாமல் பணியாளர்களைத்தடுப்பது (ஆபாச இணையதளங்களுக்கு எப்போதும் தடை, யூட்யூப் தளத்திற்கு வேலைநேரத்தில் தடை)
இந்த மாதிரியான பல வேலைகளை அது செய்யவேண்டி இருப்பதால், தேவையான அளவு திறன் இல்லாத ஒரு பெட்டியை விலை குறைவாக இருக்கிறது என்று பணிக்கு அமர்த்தினால் கிளை அலுவலக வேலை மிகவும் பாதிக்கப்படும்.
சில்லுக்குள் ஓர் சிற்றுலகம்
திரும்பத்திரும்ப இந்தக்கட்டுரை தொடரில் சொல்லி வந்தது போல், பொது நோக்குச்செயலிகள் விளையாட வரும்போது தபால் ஆஃபிஸ் பணியாளரைப்போல அந்த செயலியை வைத்துக்கொண்டு பல்வேறு வகையான காரியங்களை செய்து கொள்ள முடிகிறது. ஆனால் வேகம்உதைக்கிறது. ஏஸிக் சில்லுகளை உபயோகித்தால் எக்கச்சக்க வேகம் கிடைக்கிறது ஆனால் அவை என்னென்ன வேலைகளைச்செய்ய முடியும் என்கிற பட்டியல் மிகவும் சிறிதாகி விடுகிறது. நமக்கென்னவோ கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை. மற்ற துறைகளில் இது போன்ற சிக்கல்கள் வரும்போது இரண்டு இலக்குகளையும் சேர்த்து அடையும் தீர்வுகளை கண்டு பிடிப்பது மிகவும் கடினம். எனவே இரண்டு இலக்குகளில் ஒன்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துகொண்டு இரண்டாவது இலக்கை ஓரமாக தள்ளிவிட்டு போக வேண்டியிருக்கும். ஆனால் மின்னணுவியலில் மட்டும் கொஞ்ச நாட்கள் காத்திருந்தால் போதும், சென்ற இதழில் நாம் பார்த்த மூரின் விதி .(Moore’s Law) நமக்கு கை கொடுக்க வந்துவிடும்!
கட்டுரைத்தொடரின் ஆரம்பத்தில் இன்டெல் நிறுவனத்தின் பெண்டியம் பொது நோக்கு செயலியை பற்றி பேசினோம் அல்லவா? அப்போதெல்லாம் ஒரு சில்லு வாங்கினால் அதனுள் ஒரு பெண்டியம் செயலி மட்டும்தான் இருக்கும். இப்போதெல்லாம் இந்தத்துறை எக்கச்சக்கமாய் முன்னேறி இருப்பதால், இன்டெல் நிறுவனமே ஒரே சில்லுக்குள் இரண்டு நான்கு, எட்டு என்று பல பொதுநோக்கு செயலிகளை ஒரு ICக்குள் அடைத்து விற்கிறார்கள். இதனால் பொதுநோக்கு செயலிகளின் செயலாக்கத்திறன் அதிகரிக்கிறது.
அதையும் தாண்டி, கடந்த சில வருடங்களாக எஸ்ஓசி (SoC – System On a Chip) என்று அழைக்கப்படும் இன்னும் புதிய சில்லுகள் வந்து கொண்டு இருக்கின்றன. இந்த சில்லுகள் ஒரு திசைவியோ கணிணியோ அல்லது வேறு எதுவுமோ செய்ய தேவையான அத்தனை பாகங்களையும் ஒரே ICக்குள் திணித்து வைத்துக்கொண்டு வருகின்றன. இதற்கு உதாரணமாக எல்எஸ்ஐ என்ற கம்பெனி சில மாதங்களுக்கு முன்னால் அறிமுகப்படுத்திய AXM5516 என்கிற ஒரு சில்லைப்பற்றி மட்டும் பார்ப்போம்.
இப்போது இண்டெல்லுக்கு போட்டியாக ARM என்ற நிறுவனம் வித்தியாசமான முறையில் வளர்ந்து கொண்டு இருக்கிறது. ARM நிறுவனமும் பொதுநோக்கு செயலிகளை வடிவமைத்தாலும், அவர்கள் தாங்களாகவே IC எதுவும் செய்து வீற்பதில்லை. அதற்கு பதில் தாங்கள் வடிவமைத்த செயலியை எல்எஸ்ஐ போன்ற கூட்டாளி நிறுவனங்களுக்கு அவர்கள் தயாரிக்கும் சில்லுகளுக்குள் உபயோகித்துக்கொள்ள உரிமை வழங்கி விடுகிறார்கள். எல்எஸ்ஐ சில்லுகள் விற்கும்போது லாபத்தில் ARMக்கு ஒரு சின்ன சதவிகிதம் பங்கு! ARMன் செயலிகள் குறைந்த மின்சக்தியில் இயங்குவதில் பேர் பெற்றவை என்பதால் பேட்டரி திறன் பற்றிய கவலை எப்போதும் நிலவும் கைபேசிகளில் இந்த செயலிகளை உபயோகிக்க ஆரம்பித்தார்கள். இந்த வியாபாரமுறை .இப்போது மிகவும் பிரபலமாகி, இண்டெல்லை தூக்கி சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறது! டஜன் கணக்கில் ARMக்கு கூட்டாளி நிறுவனங்கள் இருப்பதாலும், இப்போது பட்டை கிளப்பிக்கொண்டு இருக்கும் சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்களின் செல்ஃபோன்களிலும் பலகை கணிணிகளிலும் இந்த செயலிகள் இருப்பதால் ஒரு நாளுக்கு ஒரு கோடி என்ற அளவில் ARM செயலிகள் விற்பதாக சொல்கிறார்கள்! எனவே மொபைல் பக்கம் போனால் சந்தையில் ARMன் பங்கு 90 சதவிகிததிற்கு மேல்! ஆனால் இவர்கள் தாங்களே சில்லுகளாக செய்து விற்காமல் வெறும் ராயல்டி மட்டுமே பெறுவதால் வருவாயை பொறுத்தவரை இன்டெல் என்ற 400 கோடி டாலர் யானைக்கு முன்னே 8 கோடி டாலர் சுண்டெலியாகத்தான் இருக்கிறார்கள். பல முறை முயன்றும் யானையால் சுண்டெலியை இதுவரை ஒன்றும் செய்ய முடியவில்லை. இப்போதைக்கு சுண்டெலிதான் சிரித்துக்கொண்டு இருக்கிறது!
மேலே உள்ள படத்தில் காட்டப்பட்டு இருப்பது எல்எஸ்ஐயின் AXM5516 ICயின் உள்கட்டமைப்பு. இப்போதைக்கு உலகிலேயே திறன்மிகக்கொண்ட ஒரு செயலியாக இது படைக்கப்பட்டு இருக்கிறது. ஒன்று, இரண்டு, நான்கு எல்லாம் போய், இந்த செயலிக்குள் பதினாறு ARM பொதுநோக்கு செயலிகள் உட்கார வைக்கப்பட்டு இருக்கின்றன.
வரும் பொட்டலங்களை விலாசம் பார்த்து பிரிக்கும் திறன் மேற்கண்ட படத்தில் Modular Packet Processor என்ற ஒரு கட்டத்துக்குள் அடங்கி விட்டது! அதற்கப்புறம் நாம் முன்சொன்ன போக்குவரத்தை கட்டுப்படுத்தும் திறனுக்கு ஒரு இஞ்ஜின், பொட்டல விலாசங்களை மாற்றி எழுத ஒரு இஞ்ஜின், சின்னச்சின்ன பொட்டலங்களை சேர்த்து பெரிய ஒரு பொட்டலம் கட்டுவது அல்லது பெரிய ஒரு பொட்டலத்தை உடைத்து பல சிறிய பொட்டலங்களை உருவாக்குவது போன்ற விஷயங்களை செய்ய ஒரு இஞ்ஜின், வரும் பொட்டலங்கள் வழியில் ஏதும் கறை படியாமல் சுத்தமாக வந்து சேர்ந்ததா என்று தரக்கட்டுப்பாடு செய்ய ஒரு இஞ்ஜின், மறையாக்கம்/விலக்கம் செய்ய ஒரு இஞ்ஜின், வைரஸ் ஏதும் உள்ளதா என்று பரிசோதிக்க ஒரு இஞ்ஜின் என்று ஒரு டஜன் இஞ்ஜின்களை அழகாக கட்டம் போட்டு இந்த ஒரு ICக்குள் உட்கார்த்தி வைத்திருக்கிறார்கள். அதற்கு மேல் இந்தக்காலத்தில் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த USBயிலிருந்து ஆரம்பித்து, புத்தம்புதிய பல இணைப்புமுறைகளை பயன்படுத்தி பிற பெட்டிகளுடன் பேசவும் இதில் திறணமைக்கப்பட்டு இருக்கிறது. ஏறக்குறைய பத்து வருடங்களுக்கு முன்பு நான் எழுதிய “மின்-குற்றங்களைத்தடுக்கும் பிணையச்செயலிகள்” என்ற ஒரு கட்டுரையில் [3], இணையப்பாதுகாப்பிற்கு இத்தகைய ஒருங்கிணைவு மிகவும் உதவும் எனவே இதைச்செய்தே ஆக வேண்டும் என்று எழுதி இருந்தேன். அது ஒன்றும் பெரிய தீர்கதரிசனம் ஒன்றும் இல்லை என்றாலும் அந்த கனவு நனவானது மனதுக்கு இதமளிக்கும் விஷயம்.
மெய்நிகர் குழாய்வழியமைப்பு
மேற்ச்சொன்ன விஷயங்கள் எல்லாம் போதாதென்று “மெய்நிகர் குழாய்வழியமைப்பு” (Virtual Pipeline Technology) என்றொரு புதிய தொழில்நுட்பம் வேறு இதில் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. நமது நாவைச்சுழல வைக்கும் இது என்ன மாதிரி தொழில் நுட்பம் என்று கொஞ்சம் பார்த்து விடுவோம்.
ஒரு கிளை அலுவலகத்தை பற்றி பேசிக்கொண்டு இருந்தோம் இல்லையா? அந்த நுழைவாயில் திசைவியினுள் வந்துபோகும் பொட்டலங்களின் செயலாக்கத்தேவைகள் நான்கு விதமாக இருக்கலாம்.
1. வெளியுலகத்தில் இருந்து உள்ளே வரும் பொட்டலங்களை முதலில் வைரஸ் செக் செய்யும் இடத்துக்கு அனுப்பி, அங்கிருந்து பச்சை விளக்கு வந்தால், பொட்டலத்தலைப்பில் கிளைக்குள் அது எந்த கணிணிக்கு போய்ச்சேர வேண்டுமோ அந்த விலாசத்தை எழுதி அனுப்ப வேண்டும்.
2. வெளியுலகத்தில் இருந்து உள்ளே வரும் இன்னொரு பொட்டலம் அன்று வீட்டிலிருந்து வேலை செய்யும் ஒரு பணியாளரிடமிருந்து வந்திருந்தால், முதலில் அதை மறைவிலக்கம் செய்து, அதன் பின் வைரஸ் ஸ்கேன் செய்து, பின் விலாசம் மாற்றி உள்ளே அனுப்ப வேண்டும்.
3. கிளைக்குள் ஒரு கணிணி காலையில் முடுக்கி விடப்படும்போது, அது விழித்தெழுந்து ஹலோ நான் எழுந்து விட்டேன் என்று சொல்ல விழையும்போது அத்தகைய அறிவிப்புகளை ஏற்று வரும் பொட்டலங்களை பொதுநோக்கு செயலிக்கு அனுப்பி அங்கு ஓடும் நிரலிகளை உபயோகித்து அந்த கணிணி விழித்தெழுந்து பிணையத்துடன் இணைந்திருக்கிறது என்று குறித்துக்கொள்ள வேண்டும்.
4. கிளைக்குள் இருப்பவர்கள் இணையத்தை மேய முற்படும்போது, வரும் பொட்டலங்களை மறையாக்கம் செய்யாமல், நேர இணையத்துக்கு அனுப்ப வேண்டும். இது அலுவலகத்துக்குள் இருந்து புறப்பட்ட பொட்டலம் என்பதால் வெளியே அனுப்பும்போது வைரஸ் ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை.
இப்படியாக SoCக்குள் குறுக்கும் நெடுக்குமாக பல பாதைகளில் பொட்டலங்கள் பயணிக்க வேண்டிய அவசியம் உண்டு. வெறும் பொதுநோக்கு செயலிகளில் உள்ளேவரும் அல்லது வெளியே போகும் எல்லா பொட்டலங்களும் செயலி வழியாகத்தான் வந்து போயாக வேண்டும். உதாரணமாக, அந்தக்காலத்து இண்டெல் x386 பொதுநோக்கு செயலிக்கு x387 என்றொரு இணைச்செயலி (Coprocessor) உண்டு. அந்த இணைச்செயலி x386 செயலி நிறைய கணித சமன்பாடுகளை சமாளிக்க வேண்டிய தேவை வந்து தடுமாறும்போது மட்டும் அதற்கு கணக்குப்பிள்ளையாக இருந்து உதவுவதற்காகவே உருவாக்கப்பட்டது. கணிதத்தேவை அதிகம் இல்லாத பொட்டலங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ள நீலப்பாதையில் x386க்குள் வந்து, அந்த செயலிக்குள்ளேயே கையாளப்பட்டு திருப்பி அனுப்பப்படும். கணிதத்தேவை அதிகம் உள்ள பொட்டலங்கள் படத்தில் காட்டப்பட்டுள்ள சிவப்புப்பாதையில் x386க்குள் வந்து, அந்த செயலியால் தேவைக்கேற்ப கணக்குப்பிள்ளையிடம் அனுப்பப்பட்டு, திரும்ப x386ல் பெறப்பட்டு அதன்பின் வெளியே அனுப்பிவைக்கப்படும்.
வரும் பொட்டலங்கள் எதுவும் நேராக கணக்குபிள்ளையிடம் சென்று பேசிவிட முடியாது. இந்த அமைப்பின் மூலம் x386 பொதுநோக்கு செயலிக்கு கொஞ்சம் உதவி கிடைத்தாலும், எல்லா பொட்டலங்களும் x386 வழியாகத்தான் வந்துபோக வேண்டும் என்ற கட்டாயம் உண்டு. அந்தக்கட்டாயம் பொதுநோக்கு செயலியை திணற அடிக்கும் என்பதால். அந்தத்திணறலை தவிர்க்கவே புத்திசாலித்தனமாக உருவாக்கப்பட்ட இந்த மெய்நிகர் குழாய்வழியமைப்பு தொழில்நுட்பம் நம் இஷ்டத்துக்கு SoCக்குள் பல பாதைகள் அமைத்துக்கொள்ள வழி செய்கிறது.
1. ஒரு பாதை வெளியிலிருந்து நேராக பாதுகாப்பு இஞ்ஜின் (மறைவிலக்கம் செய்ய) பின் வைரஸ் ஸ்கேன் இஞ்ஜின் அப்புறம் விலாசப்பிரிவு இஞ்ஜின் அதன்பின் கிளையிலுள்ள கணிணியை நோக்கி பயணம். கீழே உள்ள படத்தில் இது சிவப்பு பாதை.
2. இன்னொரு பாதை உள்ளே நுழைந்து விலாசப்பிரிவு இஞ்ஜினை மட்டும் தொட்டுவிட்டு இணையத்தை நோக்கி ஓட்டம். படத்தில் இது பச்சைப்பாதை.
3. இன்னொரு பாதை உள்ளே வந்து நேராக பொதுநோக்குச்செயலியை சென்றடைவது. படத்தில் இது நீலப்பாதை.
இப்படி டஜன் கணக்கில் பல பாதைகளை மெய்நிகர் குழாய்வழிகளாய் (Virtual Pipes) ஒரே சமயத்தில் அமைத்துக்கொண்டு லட்க்ஷக்கணக்கான பொட்டலங்களை ஒவ்வொரு வினாடியும் கையாள முடியும். எல்லா பாதைகளும் ARM பொதுநோக்கு செயலிகளை தொட்டுப்பார்த்து நமஸ்காரம் செய்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயங்கள் ஏதும் கிடையாது. மொத்தத்தில் ஒரு தொழிற்சாலைக்குள் பல்வேறு இயந்திரங்கள் ஒரே சமயத்தில் பல்வேறு திறன்களுடன் இணையாக இயங்கி தேவைக்கேற்றார் போல் வேலைகளை முடித்துக்கொடுப்பதை இந்த ஒரு SoCக்குள்ளும் நிகழ்த்த முடிகிறது! இன்னொரு விதத்தில் நமது தபால் நிலைய உதாரணத்திலிருந்து பார்த்தால் இந்த ஒரு SoC 16 பணியாளர்கள், விலாசம் பார்த்து கடிதங்களை பிரிக்கும் இயந்திரம் (MPP: Modular Packet Processor Engine), சங்கேதமொழியில் எழுதப்பட்ட கடிதங்களை சாதாரண ஆங்கிலத்திற்கு மொழி பெயர்க்கும் இயந்திரம் (IPSec: Internet Protocol Security Engine), கிருமிகள் ஏதாவது இருக்கிறதா என்று ஸ்கேன் செய்யும் இயந்திரம் (DPI: Deep Packet Inspection Engine), உள்ளே வந்த கடிதங்கள் சேதம் ஏதும் அடையாமல் வந்துள்ளனவா என்று பார்க்கும் இயந்திரம் (PIC: Packet Integrity Check Engine) என்ற எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய ஒரு பெரிய கட்டிடம்!
காலம் மாறிக்கொண்டிருக்கிறது..!
1980களில் என் தகப்பனார் தமிழ்நாட்டில் ஒரு சிறிய கிராமத்தில் வங்கி மேலாளராக பணி புரிந்துகொண்டிருந்தார். அப்போது அவர் கிளைக்கு புதிதாக தொலைபேசி இணைப்பு கொடுக்கப்பட்டது. வங்கியின் தொலைபேசி எண் 27. எண்ணுக்கு மொத்தம் இரண்டே இலக்கங்கள்தான்! ஊரில் தொலைபேசி இணைப்பு இருந்த இன்னொரு இடம் மின்சார அலுவலகம். அதன் எண் 22. கொஞ்சம் அடித்து மழை பெய்தால் இணைப்பு காணாமல்போய் விடுவது வழக்கம். அப்படி ஒருமுறை தொலைபேசி இணைப்பு துண்டுபட்டு 10 நாட்களுக்குப்பின் திரும்ப வந்தது. இணைப்பு திரும்பிவந்ததில் இருந்து வங்கிக்கு வந்த தொலைபேசி அழைப்புக்கள் எல்லாம் “ஏங்க, எங்க வீட்டுக்கு எப்போ கரண்ட் வரும்?” என்பதாகவே இருந்தது! பிரச்சினையை புரிந்து கொண்ட என் தந்தையார் தொலைபேசி நிலையத்தை கூப்பிட்டு வங்கிக்கும் மின்சார நிலையத்துக்குமான தொலைபேசி இணைப்புகள் மாறி இருப்பது போல் தெரிகிறது என்று கூறி இருக்கிறார். நிலைமையை புரிந்து கொண்ட தொலைபேசி நிலைய இளம் பொறியாளர், திரும்பவும் ஒரு ஆளை இதை சரியாக்க இந்த ஊருக்கு அனுப்பி வைப்பதற்கு பதிலாக, அந்த தொலைபேசி நிலையத்திலேயே அவர் மேஜைக்கு பின்னால் இருக்கும் பேனலில் அந்த இரண்டு ஒயர்களையும் வெட்டி மாற்றி இணைத்து பிரச்சினையை சமாளித்தார்!
அந்த எளிமையான காலக்கட்டதிலிருந்து 25 வருடங்கள் கழித்து பிறந்திருக்கும் நாற்பத்தி மூன்று சதுர மில்லிமீட்டர் பரப்பளவு கூட இல்லாத இந்த செயலிக்குள் 380 கோடி டிரான்சிஸ்டெர்கள் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றன. திருப்பி பார்த்தால் கீழ்ப்புறம் 1680 உலோக புள்ளிகள் தெரியும். ஒவ்வொரு புள்ளியும் பிணையத்துடன் இச்செயலி தொடர்பு கொள்ள ஏற்படுத்தப்பட்டிருக்கும் தொடுபுள்ளிகள் (contact points). வினாடிக்கு 8000 கோடி பிட்டுகளை கையாளக்கூடிய இந்த ராட்சச செயலி, ஒரே சமயத்தில் லட்சக்கணக்கான தொலைபேசி இணைப்புகளையும் இணைய இணைப்புகளையும் இனம் பிரித்து வழங்க வல்லது. இது செல்போன் டவர், ஆயிரக்கணக்கான இணைய இணைப்புகளை கையாளும் மத்திய அலுவலகங்கள் போன்றவற்றில் உபயோகப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டிருந்தாலும், இதன் குடும்பத்தை சேர்ந்த திறன் குறைக்கப்பட்ட தம்பி தங்கை வடிவங்கள் சிறிய அலுவலகங்கள் மற்றும் எதிர்கால வீடுகளில் நுழைந்து பணியாற்ற வல்லவை. என் தந்தையின் வங்கியில் நிகழ்ந்தது போன்ற இணைப்பு மாற்றங்கள் தொடர்பாடல் செயலிகளை உபயோகித்து தொலைபேசி இணைப்பு கொடுக்கும்போது வருவதில்லை. ஏனெனில் உங்கள் தொலைபேசி எண் உங்கள் வீட்டுக்கு வரும் கேபிளை பொருத்ததில்லை. அது உங்கள் வீட்டில் இருக்கும் திசைவியிலும் மற்றும் இருபுறங்களிலும் ஓடித்திரியும் பொட்டலங்களிலும் பொதிந்திருக்கிறது. உதாரணமாக வானேஜ் (Vonage) என்ற ஒரு அமெரிக்க டெலிஃபோன் கம்பெனியின் திசைவியை இணையத்தில் எங்கே இணைத்தாலும், அது நியூயார்கோ காட்டேறிகுப்பமோ, அது உங்கள் வீட்டு தொலைபேசி எண்ணாகவே வேலை செய்து உங்களுக்கு அழைப்புகளை அமைத்து தருகிறது. பன்னாட்டு கைபேசிகளிலும் (International cellphone) ஒரே எண் உலகம் முழுவதும் வேலை செய்வதை நாம் பார்க்கிறோம்.
நிச்சயமாக இந்த AXM5500 பரிணாம வளர்ச்சி புத்தகத்தின் கடைசி அத்யாயம் ஒன்றும் இல்லை. போன வாரம் எல்எஸ்ஐ நிறுவனத்தை அவாகோ (Avago Technologies) என்ற இன்னொரு நிறுவனம் .ஓட்டு மொத்தமாக வாங்கி விட்டது! ஃப்ரீஸ்கேல் (Freescale), மார்வெல் (Marvel), ப்ராட்காம் (Broadcom) என்று பல போட்டி நிறுவனங்கள் புதிய செயலிகளைப்படைப்பதில் கடும் தீவிரத்துடன் ஈடுபட்டுள்ளன. பதினாறு ARM பொதுநோக்கு செயலிகளுக்கு பதில் முப்பத்திரண்டு அல்லது அறுபத்திநான்கு ARM பொதுநோக்கு செயலிகளை உள்ளே உட்கார வைத்திருக்கும் SoC சில்லுகளின் உருவமைப்பு இப்போதே நடந்து கொண்டிருக்கிறது. மொத்தம் எட்டே எட்டு இணைப்புகளுடன் ஒரு எட்டுக்கால் பூச்சி போல் தோன்றிய 555 ஐசி காலத்தில் இருந்து, நுண்செயலிகள், பிணையச்செயலிகள், தொடர்புச்செயலிகள் என்று பல பரிணாமங்களைத்தாண்டி வெகுதூரம் வந்துவிட்டோம். IC சில்லுகள் தயாரிப்பவர்கள் இப்படி கலப்பு கட்டமைப்பு (Hybrid Architecture) முறைகளில் சில்லுகளை உருவாக்கினாலும், விதம்விதமான ஒடுக்கிகளைக்கொண்டு ஒரு நிரலியை பல செயலிகளில் ஓட்டுவது போல, SoC கட்டமைப்பைப்பற்றி கவலைப்படாமல் மென்பொருட்களாலேயே வரையறுக்கப்படும் பிணையங்கள்தான் (Software Defined Networking) இணைய சொர்கத்துக்கு ஒரே வழி என்று இன்னொரு எண்ணம் சிறகு விரித்திருக்கிறது. இன்னும் ஐம்பது வருடங்களில் பிணையம் எப்படி உருமாறும் என்பது ஒருவருக்கும் தெரியாத சிதம்பர ரகசியம். எனினும் கடந்த ஐம்பது வருடங்கள் இந்தத்துறை முன்னேறும் வேகத்தைப்பற்றி நமக்கு கற்று கொடுத்திருப்பதிலிருந்து அந்த ரகசியத்தை நாம் துரத்திக்கொண்டு ஓடும் வழியில் இன்னும் பல அற்புதங்களை நம் வாழ்நாளிலேயே பார்க்கப்போகிறோம் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
(முற்றும்)
oOo
No comments:
Post a Comment